AUTHOR: REV.DR. D.SURESH RAJAN
சங்கீதம் - 108முன்னுரை:
தாவீது அரசர் தனது பற்றுறுதியை வெளிப்படுத்தும் ஒப்பற்ற ஒரு திருப்பாடலிது. மிகவும் கடினமான போராட்டத்தின் நேரத்தில்கூட இறைவனை நம்பும் தாவீதின் மனநிலையை இப்பாடல் வெளிப்படுத்துகிறது. ‘வெற்றி என்பது போர்க்களத்தில் தொடங்குவதில்லை; அது இருதயத்தில் தொடங்குகிறது’ என்ற அற்புதமான உண்மையை இப்பாடலில் நாம் காண்கிறோம். தாவீது, வெளிப்புற சூழ்நிலைகளைப் பார்த்து அல்லாமல், இறைவனின் நம்பகத்தன்மையை உணர்ந்த வராக இச்சங்கீதத்தை எழுதியிருக்கிறார்.
1. ஆயத்தம்: (வசனங்கள் 1-2)
“தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக் கீர்த்தனம் பண்ணுவேன்; என் மகிமையும் பாடும். வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள், நான் அதிகாலையில் விழிப்பேன்.” என்று சொல்லி தாவீது இப்பாடலைத் தொடங்குகிறார்.
இறையாசியை பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆசையினால் தாம் ஆயத்தமாக இருப்பதாக தாவீது இங்கு கூறுகிறார். தனது இசைக்கருவிகளோடு அதிகாலயிலேயே ஆண்டவருக்காக காத்திருக்கும் தமது வாஞ்சையை அவர் இங்கு வெளிப்படுத்துகிறார். தாவீது இறைவன் மீது தாம் வைத்திருந்த அசைக்க முடியாத மற்றும் உறுதியான நம்பிக்கையை இங்கு வெளிப்படுத்துகிறதை நாம் காண்கிறோம். “இருமனமுள்ள, நிலையற்ற போக்குடையவர்கள் ஆண்டவரிடம் ஏதாவது பெற முடியும் என நினைக்காதிருக்கட்டும்” (யாக்கோபு-1:7,8) என்ற திருவசனத்தை மனதில் கொண்டவர்களாக இறைவன் மீதுள்ள பற்றுறுதியில் உறுதியாக நிலைத்திருக்க அழைக்கப்படுகிறோம்.
2. நன்றி படையல்: (வசனங்கள் 3-5)
“ஆண்டவரே, மக்களினங்களிடையே உமக்கு நன்றி செலுத்துவேன்: எல்லா இனத்தாரிடையேயும் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்” என்று, இறைவன் தனது வாழ்வில் செய்த நன்மைகளை தாவீது நினைவுகூறுகிறார். ஆண்டவருக்கு நன்றி சொல்லுவது என்பது குரலை உயர்த்திப் பாடல்களை பாடுவதோடோ, வானத்துக்கும் பூமிக்கும் இடையில் குதிப்பதோடோ அல்லது இசைக்கருவிகளின் இசைக்கு நடனமாடுவதோடோ முடிந்துவிடுவது அல்ல. அது எல்லா மக்களிடையேயும் ‘கர்த்தரே தேவன்’ ‘அவரே ஆண்டவர்’ என பிரகடனப்படுத்துவது ஆகும். நன்றி நவில்வது, இறைவன் மேல் நமக்குள்ள நம்பிக்கையை வளர்க்கிறது. அந்த நம்பிக்கையை நாம் மற்றவர்களுக்கு கடத்து கிறோம் என்பதை புரிந்துகொள்ள நாம் அழைக்கப்படுகிறோம்.
3. மன்றாட்டு: (வசனங்கள் 6-12)
“உம் அன்பர்கள் விடுதலை பெறுமாறு உமது வலக்கையால் அவர்களுக்குத் துணை செய்யும்! என் விண்ணப்பத்திற்குப் பதிலளியும்” (வசனம்-6) என்று தாவீது தனக்காக மாத்திரமின்றி, அனைத்து இறைமக்களுக்காகவும் பிரார்த்தனை ஏறெடுப்பதை நாம் இங்கு காண்கிறோம்.
ஆண்டவர் அனைத்துலகின் மேலும் அதிபதியானவர் என்பதை குறிப்பதற்காக, கிலேயாத், எபிராயீம், யூதா, மோவாப், ஏதோம் ஆகிய அனைத்து தேசங்களும் என்னுடையது என விசுவாச உறுதியுடன் கூறுகிறார்..
ஆகவே, “எதிரிகளை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்; மனிதர் தரும் உதவியோ, வீண்” (வசனம்-12) என்ற சங்கீதக்காரருடைய மன்றாட்டின் கருத்தை புரிந்துகொண்டவர்களாக, நம்முடைய வாழ்வின் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு எல்லாம்வல்ல இறைவனின் உதவி மிக மிக அவசியமான ஒன்று என்பதை அறிந்து உணர்வோம்.
“சிலர் தேர்ப்படையிலும், சிலர் குதிரைப்படையிலும் பெருமை கொள்கின்றனர்: நாமோ நம் கடவுளாகிய ஆண்டவரின் பெயரில் பெருமை கொள்கின்றோம்” (சங்கீதம்-20:7) என்ற சங்கீதக் காரரின் ஒப்புதல் அறிக்கையை நமதாக்கிக்கொண்டு மகிழ்வுடன் வாழ்வோம்.
முடிவுரை: (வச.33-43)
விசுவாச அன்பர்களே! நம்மை வழி நடத்தும் வல்ல கடவுளின் ஆசியைப் பெற நாம் ஆயத்ததுடன் அனுதினமும் காத்திருப்போம். அவருக்கு நன்றி செலுத்தி அவர் புகழை அனைவருக்கும் எடுத்துரைப்போம். “கடவுளின் துணையால் வீரத்துடன் போரிடுவோம்; அவரே நம் எதிரிகளை மிதித்துப்போடுவார்.” (வசனம்-13) என்ற வாக்கிற்கிணங்க அவரை முற்றிலும் சார்ந்து கொண்டவர்களாக வெற்றி வாழ்வு வாழ்வோம்.
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
சங்கீதங்கள் கற்றுத்தரும்விலையேறப்பெற்ற சத்தியங்கள். தொடரும்......
ஆசிரியர்: அருட்திரு. அறிவர். டி. சுரேஷ் ராஜன்,
தலைவர் (இந்திய மறை மாநாடு), குளோபல் மெத்தடிஸ்ட் திருச்சபை.
AUTHOR: REV. DR. D. SURESH RAJAN,
CONFERENCE SUPERINTENDENT, INDIA ANNUAL CONFERENCE,
GLOBAL METHODIST CHURCH IN INDIA.