Vedha Aratchi
EPISODE-106
March 2026
சங்கீதங்கள் கற்றுத்தரும் விலையேறப்பெற்ற சத்தியங்கள்

AUTHOR: REV.DR. D.SURESH RAJAN

சங்கீதம் - 106

அறிமுகம்:

இஸ்ரவேலின் வரலாற்றில், தேவனுக்கும் மனித னுக்குமான உறவின் சுருக்க பதிவே இச்சங்கீதம். இறைவ னின் முடிவில்லா இரக்கத்தையும், மனிதனின் குறுகிய மாறுபாட்டுணர்வையும் இது ஒப்பிடு கிறது. தேவன் தம் மக்களுக்குச் செய்த அற்புதங்களையும், அவர்கள் செய்த துரோகங்களையும் விவரிக்கும் இப்பாடல், நம் ஆன்மீக வாழ்வுக்கு தேவையான படிப்பினைகளை வழங்குகிறது.

1. இறைவனின் வல்ல செயல்களும் மனிதனின் துதியும்: (வச.1-2)

இச்சங்கீதத்தின் ஆரம்பமே ஒரு பெரிய உண்மையை நமக்கு வெளிப்படுத்துகிறது. “ஆண்டவரின் வலிமைமிகு செயல்களை யாரால் இயம்ப இயலும்? அவர்தம் புகழை யாரால் விளம்பக்கூடும்?” (வச.1) என்று சங்கீதக்காரர் கேட்கிறார். இக்கேள்வி மனிதனின் வரையறுக்கப்பட்ட தன்மையை உணர்த்துகிறது. நாம் நினைப்பதற்கும் வேண்டிக்கொள்வதற்கும் மேலாக இறைவன் செய்ய வல்லவர். சர்வவல்ல தேவனின் மகத்துவத்தை நம்முடைய சிறிய வார்த்தைகளாலும், அற்பமான துதிகளாலும் முழுமையாக வெளிப்படுத்தமுடியாது. கடவுளின் செயல்கள் குறித்து நாம் எவ்வளவு சிந்திக்கிறோமோ, அவ்வளவாய் அவர் நமக்குச் செய்த அற்புதங்களை அறிந்து கொள்ளலாம். நமது பிறப்பு தொடங்கி, தனிப்பட்ட வளர்ச்சி, இரட்சிப்பு, வழிநடத்துதல், குணமாக்குதல், அன்பான நண்பர்கள், குடும்பம் என இப்பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. கடவுள் இன்றும் பெரிய அற்புதங்களைச் நம் வாழ்வில் செய்கிறார்!

2. செங்கடலைப் பிளந்த வல்லமை: (வச.7-9)

“அவர் செங்கடலை அதட்டினார்: அது உலர்ந்துபோயிற்று: பாலை நிலத்தில் நடத்திச்செல்வது போல் அவர்களை நடத்திச்சென்றார் (வச.9).” முன்னால் செங்கடல், பின்னால் எகிப்தின் இரதங்கள் என அவர்கள் சிக்கிக்கொண்டபோது, இறைவன் தலையிட்டு இயற்கையின் நியதி களுக்கு அப்பாற்பட்டு வழி உண்டாக்கினார். நம் வாழ்விலும் சத்துருவின் சூழ்ச்சிகளும், எதிர்பாராத பிரச்சனைகளும் சூழ்ந்து கொள்ளும்போது, அவற்றை இயேசுவின் நாமத்தில் அதட்டி, பிசாசுக்கு எதிர்த்து நிற்கும் வல்லமை விசுவாசிகளுக்கு உண்டு.

3. மக்களின் நன்றிமறதி: (வச.13-15)

“அவர் செய்தவற்றை அவர்கள் விரைவிலேயே மறந்துவிட்டார்கள்.. பாழ்வெளியில் அவர்கள் இறைவனைச் சோதித்தார்கள்” (வச. 13-15).

செங்கடலைக் கடந்த அதே மக்கள், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் எல்லையில் நிற்கும்போது அவநம்பிக்கை கொண்டார்கள். இறைவன் எண்ணற்ற அற்புதங்களைச் செய்தும், அவர்கள் அவருடைய வார்த்தையை நம்பாமல், முறுமுறுத்தார்கள். இது மனித இயல்பின் குருட்டுத் தன்மையை வெளிப்படுத்துகிறது. மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான தவறுகளைச் செய்து விட்டு புதிய அற்புதங்களை எதிர்பார்க்கும் மனித மனதை இது நமக்கு நினைவூட்டுகிறது.

வனாந்தரத்தில் இஸ்ரவேலர், தாங்கள் விரும்பிய உணவு-தண்ணீரை பெறுவதில் கவனம் செலுத்தினார்கள். நீடித்த ஆன்மீக திருப்தியைக் காட்டிலும் உடனடி உடல் இன்பத்தில் அவர்கள் அதிக அக்கறை காட்டினார்கள். மேலும் கடவுளின் பராமரிப்பு மற்றும் ஒத்தாசையில் நம்பிக்கை வைக்க மறுத்துவிட்டார்கள் (எண். 11:18-33). நாம் விரும்பியதைப் பெறவில்லையென்றால், அது நமது நன்மைக்காக இல்லை என்று கடவுளுக்குத் தெரிந்திருக்கலாம். ஆகவே, அவருடைய பராமரிப்பிலும் ஒத்தாசையிலும் நாம் நம்பிக்கை வைக்கவேண்டும்.

4. சிலை வழிபாடும் இறைவனின் கருணையும்: (வச.34-46)

“வேற்றினத்தாரோடு கலந்துறவாடி, அவர்களின் வழக்கங்களைக் கற்றுக்கொண்ட னர்... அவர்களின் தெய்வச்சிலைகளைத் தொழுதனர்” (வச. 34-39).

இஸ்ரவேல் கடவுளை விட்டு விலகியது. பெரிய அற்புதங்களைக் கண்டபிறகு, எப்படி அவர்கள் கடவுளைவிட்டு விலகி, சிலைகளை வணங்க முடியும்? நாமும் கடவுளுடைய பெரிய அற்புதங்களைக் கண்டிருக்கிறோம், ஆனாலும், உலகத்தின் சிலைகளான அதிகாரம், பணம், வசதி, புகழ், உடலுறவு மற்றும் இன்பம் ஆகியவற்றால் மயங்குகிறோம். இஸ்ரவேல் கடவுளை மறந்தது போல, நாமும் அவரை மறந்து உலக அழுத்தங்களுக்கு அடிபணிகிறோம். “எனவே, ஆண்டவரின் சினம் அவர்தம் மக்களுக்கெதிராகப் பற்றியெரிந்தது; வேற்றினத்தாரின் கையில் அவர்களை ஒப்படைத்தார். எதிரிகள் அவர்களை ஒடுக்கி, அவர்களைத் தாழ்த்தினர்” (வச.40-42). இஸ்ரவேலருக்கு உதவுவதற்காக கடவுள் அவர்களுக்கு பிரச்சனைகளை அனுமதித்தார். நம் வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சனைகள் நமக்கு உதவிகரமாக இருக்கமுடியும், ஏனெனில் அவை நம்மைத் தாழ்த்த உதவுகின்றன, “அவர்களைச் சிறைசெய்தவர்கள் முன்னிலையில் இரக்கம் பெறும்படி செய்தார்” (வச.46). நம் பாவங்களுக்காகத் தமது குமாரனை மரிக்க அனுப்புவதில் கடவுள் நம்மிடம் இரக்கங்காட்டினார் (ரோம.5:8). நாம் பாவத்திற்குக் அடிமைக ளாக இருந்தபோதே அவர் இதைச் செய்துள்ளதால், நாம் அவர் பிள்ளைகளாயிருக்கையில் நம்மீது இரக்கங்காட்டுவது அதிக நிச்சயம்.

முடிவுரை:

இச்சங்கீதம் ஒரு வரலாற்றுப் பதிவு மட்டுமல்ல; நம் ஒவ்வொருவரின் ஆத்துமா வையும் படம் பிடித்து காட்டும் ஒரு கண்ணாடி. இறைவன் மன்னிக்கும் சுபாவமுள்ளவர், இரக்கமுள்ளவர்; அவர், தம் அன்பை என்றென்றும் நிலைக்கச்செய்பவர். ஆனால், நாம் நமது மாறுபாட்டுணர்வை உணர்ந்து, அவரிடம் திரும்பவேண்டும். நம் வாழ்வின் செங்கடல்களை அவர் அதட்டி வழியுண்டாக்க, நாம் அவரிடம் வேண்டுதல் செய்யவேண்டும். கடந்தகாலத்தில் அவர் செய்த அற்புதங்களை நினைவுகூர்ந்து, எதிர்காலத்தில் அவர் நம்மைக் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கையுடன் வாழ்வதே இச்சங்கீதம் நமக்குக் கற்றுத்தரும் பாடம்.

சங்கீதங்கள் கற்றுத்தரும்விலையேறப்பெற்ற சத்தியங்கள். தொடரும்......



ஆசிரியர்: அருட்திரு. அறிவர். டி. சுரேஷ் ராஜன்,
தலைவர் (இந்திய மறை மாநாடு), குளோபல் மெத்தடிஸ்ட் திருச்சபை.

AUTHOR: REV. DR. D. SURESH RAJAN,
CONFERENCE SUPERINTENDENT, INDIA ANNUAL CONFERENCE, GLOBAL METHODIST CHURCH IN INDIA.