VasanaDhyian
EPISODE-167
March 2026
தெய்வத் திருக்காட்சி
மனந்திரும்பிய யோபு மறுவாழ்வு பெற்ற அதிசயம்

AUTHOR: REV.SJD Dharmaraja

நான் என்னை அருவெறுத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன். யோபு. 42:6

யோபுவின் நண்பர்கள், யோபு மனந்திரும்ப வேண்டும் என்று விரும்பினர், ஆனால் துணிகர பாவம் செய்யாததால் அவர் அதற்கு மறுத்துவிட்டார். ஆனால் ஆனால், கடவுளை சந்தித்த யோபு (யோபு.38:1, 42:5) இப்போது, தானாக முன்வந்து மனந்திரும்புகிறார். தாம் துன்பத்தினூடே கடந்து சென்ற நாட்களில் தன்னுடைய நாவினால் செய்த பாவங்களுக்காகவும் மனஸ்தாபப்படுகிறார்.

எவ்வெவற்றுக்காக யோபு மனந்திரும்பினார்?
கடவுளிடமிருந்து பதில்களையும் விளக்கங்களையும் கோரிய ஆணவத்திற்காக யோபு மனந்திரும்புகிறார். கடவுளின் நீதியை எதிர்த்து சவால் விட்டதற்காக அவர் மனந்திரும்புகிறார். தன்னை நியாயப்படுத்தும்படி கடவுளை இழிவுபடுத்தியதற்காக மனந்திரும்புகிறார். இறுதியாக, கடவுளை நன்கு அறிந்து கொள்ளாமல் போன பாவத்துக்காக அவர் மனந்திரும்புகிறார். கடவுளைப் பற்றிய யோபின் பேச்சுகள் அறியாமையால் செய்யப்பட்டவையே. யோபு கடவுளின் இறையாண்மையை பாராட்டுவதில் குறைவுபட்டார்.

தெய்வ-திருச்காட்சியில் யோபு கற்றுக்கொண்ட பாடம்: தெய்வத் திருக்காட்சியில் (கடவுளுடனான சந்திப்பில்), யோபு கற்றுக்கொண்ட பாடம் மனத்தாழ்மை (யோபு.42:6) ஆகும். யோபு கடவுளை சந்தித்தபின் எந்த காரியத்தைக் குறித்தும் இது ஏன்? இது எதற்காக? என்று கேட்கவில்லை மாறாக தன்னை தாழ்த்துகிறார். கான்ஸ்டபிள் என்ற இறையியல் அறிஞர் கூறுவது போல், நாம் கடவுளை அறிந்திருந்தால் நமது பாடுகளைக் குறித்து, இது ஏன்? எதற்காக? என்று கேட்கவே மாட்டோம். மாறாக உபவாசத்திலும், ஜெபத்திலும் நம்மை தாழ்த்திக்கொள்ளத் தொடங்குவோம். மட்டுமல்ல, துன்பங்களின் மர்மத்தை நாம் மனதார ஏற்றுக்கொள்வோம்.

பெற்றோரின் முடிவுகளை புரிந்து கொள்ளாத குழந்தைகளைப் போல நாம் கடவுளை புரிந்து கொள்ளாதிருக்கலாம்; ஆனால், குழந்தைகள் பெற்றோரை முழுமையாக நம்புவதைப்போல், கடவுள் மீது, மனத்தாழ்மையுடன்கூடிய நம்பிக்கையை வைக்க அழைக்கப்படுகிறோம். கடவுளை சந்திக்க, அவரை அறிந்து கொள்ள வாஞ்சிப்போம்; கடவுள் முன், நம்மைநாமே தாழ்த்தி அர்ப்பணிப்போம். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்


அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா, ஊழிய இயக்குநர்
இரட்சிப்பு ஊழியங்கள், சென்னை-93, தென்னிந்தியா