சகோ. எம். அசரியா ஞானதாஸ் எம்.ஏ; எம்.எட்
குஜராத்தில் ரெவிங்டன் என்ற தேவமனிதர் ஒரு கம்பெனியில் மேனேஜராக பணியாற்றினார். ஒரு விசுவாசியாக, அலுவலகம், குடும்பம் மற்றும் சமூகத்தில் கிறிஸ்துவின் முன்மாதிரியில்; சமாதானம் நிறைந்த வாழ்வு வாழ்ந்து வந்தார். நல்ல சம்பளம் கிடைத்ததால் நன்செய்-புன்செய் நிலங்கள், வசதியான வீடு என செல்வந்தராகத் திகழ்ந்தார். ஒருமுறை ரெவிங்டன், வெளிநாட்டில் 3ஆண்டுகள் பணியாற்றும் நிலை ஏற்பட்டது. வெளிநாடு சென்ற சமயம் அண்டை நிலத்துக்காரன், ரெவிங்டனின் நிலத்தில் பலலட்சம் ரூபாய் மதிப்புடைய ஒருபகுதியை ஆக்கிரமித்துக் கொண்டான்.
வெளிநாட்டிலிருந்து திரும்பிய ரெவிங்டன், நிலங்களை சுற்றிப்பார்த்தபோது தன் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தார். அண்டை நிலத்துக்காரனிடம் வழக்காடவோ, அவனை மன்னிக்கவோ மனமின்றி கவலையுடன் வாழ்ந்துவந்தார். இந்நிலை யில் ரெவிங்டன் தனது பணியிலிருந்து ஓய்வு பெற்றார். பின்னர், தனது 80வது வயதில் நோயுற்று மரணத்தருவாயில் இருந்தார். மரிக்குமுன் அவருக்கு பரி.நற்கருணை கொடுக்க, சபையின் போதகர் வந்தார். போதகர் நற்கருணை வழங்கியபின் ரெவிங்டன் அவரிடம், “ஐயா! நான் இயேசுவுக்கு பிரியமாக வாழ்ந்தபோதும் எனது நிலத்தை அபகரித்தவனை என்னால் மன்னிக்கவே முடியவில்லை” எனக்கூறி புலம்பினார். அதற்கு போதகர், “ஐயா! இயேசு இதை விரும்பமாட்டார்; நீங்கள் அவனை மன்னித்தால்தான் பரலோகராஜ்யத்திற்கு பூரண சுதந்திர வாளி ஆக முடியும்” எனக் கூறினார். உடன்தானே, ரெவிங்டன் அந்த மனிதனை மன்னித்து அவனோடு ஒப்புரவானார். இதைக்கண்ட அம்மனிதனும் மனந்திரும்பி தன்வாழ்வை இயேசு வுக்கு அர்பணித்து தேவனுடைய பிள்ளையாக மாறினான். சில நாட்களுக்குப்பின் ரெவிங்டன் நற்சாட்சி பெற்றவராய் மரித்து நித்திய வாழ்வுக்குள் பிரவேசித்தார்.
பிரியமானவர்களே! நாமும், எந்த குற்றமும் செய்யாதபட்சத்திலும் ரெவிங்டனைப்போல், பிறர் நமக்கெதிராய் செய்யும் குற்றங்களை மன்னித்து தேவாசீர்வாதம் பெறுவோம்.
வேதம் இவ்வாறு கூறுகிறது:
மனுஷருடைய தப்பிதங்களை மன்னியாதிருந்தால் உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை மன்னியாதிருப்பார். மத்-6:15
கிறிஸ்துபோல ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். கொலோ-3:13
கர்த்தர் மன்னிக்கிறதற்கு தயை பெருத்திருக்கிறார். ஏசா-55:7
கர்த்தரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு. தானி-9:10