Salomi
EPISODE-44
March 2026
இந்திய கிறிஸ்தவ திருச்சபை சரிதை: (1முதல் 21ம் நூற்றாண்டுவரை) தொகுதி-9 பகுதி-3
9. இந்திய கிறிஸ்தவம் - 17ம் நூற்றாண்டு:
3. ராபர்ட் டி நோபிலி - மதுரை மிஷன்:
சோதனைகள், சர்ச்சைகள், மாற்றங்கள், எதிர்ப்புகள்

ராபர்ட் டி நோபிலி (1577-1656) ஒரு இத்தாலிய பிரபு, கார்டினலின் மருமகன், ஜேசுயிட் சபைகுரு; இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் கத்தோலிக்க மறைப்பணியை மேற்கொண்டவர். தத்துவ போதக சுவாமிகள் என்றழைக்கப்பட்ட நோபிலி, கி.பி.1606 ஜனவரியில் கோவாவிலிருந்து கொச்சிக்கு குடிபெயர்ந்தார். போர்த்துகீசியர்களின் செயல்பாடுகள், இந்து உயர்சாதியினருக்கு ஆட்சேபனைக்குரியவை ஆயின. போர்த்துகீசியர் தோல் காலணிகளை அணிந்தனர் - இறந்த விலங்கிலிருந்து வரும் எதையும் உயர்சாதி இந்தியர்கள் யாரும் தொடக்கூடாது. போர்த்து கீசியர்; கத்தி மற்றும் முட்கரண்டி கொண்டு சாப்பிட்டார்கள் - இது இந்துக்களுக்;கு அருவருப் பானது. அவர்கள் திராட்சரசம் குடித்தார்கள், இறைச்சி சாப்பிட்டார்கள் எல்லாவற்றையும் விட மோசமாக, மாட்டிறைச்சி சாப்பிட்டார்கள் - இவை அனைத்தும் தடையாக அமையும் என்பது நோபிலிக்கு தெளிவாகியது. கிறிஸ்துவுக்காக பிராமணர்களை வெல்ல விரும்பினார், அவர் களின் பொருட்டு அவர் தன்னால் முடிந்தவரை ஒரு இந்திய துறவிபோல், குறிப்பாக பிராமண வாழ்க்கை முறையையும், உணவு - உடை -பழக்கவழக்கங்களையும் பின்பற்றி மறைப்பணியை செய்தார். ஒரு பிராமணன் போல், கீழ் சாதியினருடன் அனைத்து தொடர்பையும் தவிர்த்தார்

தமிழ் மொழி மற்றும் தமிழர் கலாச்சாரத்தில் தன்னை இணைத்துக் கொள்ள மிகுந்த ஈடுபாடு கொண்ட ராபர்ட் டி நோபிலி, பிராமணர்களிடையே கத்தோலிக்க மதத்தைப் பரப்பும் நோக்கில் சமஸ்கிருதத்தை கற்றுக்கொண்டார். கி.பி.1608ல் சிவதர்மா என்ற ஒரு தெலுங்கு பிராமணர், நோபிலிக்கு சமஸ்கிருதம் கற்பிக்க முன்வந்தார். ராபர்ட் டி நோபிலியின் இந்த முயற்சி சர்ச்சையை ஏற்படுத்தியது; எனினும், பிராமணரிடையே மறைப்பணி செய்ய அது மிக உதவியது. நோபிலி, கத்தோலிக்க மறைபொருள்களை தமிழ் மொழியில் எழுதி வெளியிட்டார். அவர் கி.பி.1606ல் மதுரைக்கு வந்து, மதுரை மிஷனின் ஒரு அங்கமாக பணியாற்றத் தொடங்கினார். மதுரை மிஷன், ஜேசுயிட் அருட்பணி வரலாற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது. கல்விப்பணி, சமூகப்பணி அருட்பணி ஆகியவற்றில் மதுரை மிஷனோடு இணைந்த இவரது முயற்சிகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

மதுரை மிஷன்:

17ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவின் தென்கிழக்கில் - கோரமண்டல் கடற் கரையைச் சுற்றி நிறுவப்பட்ட புகழ் பெற்ற ஒரு மிஷன், ஜேசுயிட் மிஷன் ஆகும். இந்த மிஷனின் அருட்பணித் தளங்களில் கிறிஸ்தவத்தைப் பரப்புவதில் ராபர்ட் டி நோபிலி மற்றும் ஜான் டி பிரிட்டோ ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர். மிஷனரியான ஜான் டி பிரிட்டோ, மதுரை மிஷனின் சுப்பீரியராக நியமிக்கப்பட்டு, அதன் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார். இந்த மிஷனின் வளர்ச்சியை பெஸ்கி முனிவர் மேலும் ஊக்குவித்தார்.

மதுரை மிஷன், பிராமணர்களிடையே மதமாற்றங்களை எளிதாக்க, ‘இணக்க முறை’யை அனுமதித்தது. அதாவது மதமாறிய பிராமணர் பூநூல் அணியலாம், குடுமி வைத்துக் கொள்ள லாம், பிராமணச் சங்குகளை அனுசரிக்கலாம் என்பதே அந்த அணுகுமுறை. நோபிலியின் இந்த அணுகுமுறை மற்ற மிஷனரிகளின் எதிர்ப்பைப் பெற்றது. மேலும் இந்த ‘இணக்க அணுகுமுறை’ பல சர்ச்சைகளையும் மோதல்களையும் உருவாக்கியது.

குறிப்பாக, கோவாவின் அப்போதைய ஆயரான கிறிஸ்தவோ என்பவர், நோபிலியின் இந்த அணுகுமுறையை விமர்சித்தார். போர்த்துகீசிய ஜேசுயிட்டான கோன்சலோ டிரான்கோசோ என்பவர், கிறிஸ்தவ வளர்ச்சிக்கு ஆபத்தான பேகன் நடைமுறையாகக் கருதி, அதைக் கடுமையாக எதிர்த்தார். இந்து பழக்க வழக்கங்களை எந்த அளவிற்கு கிறிஸ்தவத்திற்குள் ஏற்றுக்கொள்ளமுடியும் என்பதில் நிலவிய கருத்துவேறுபாடு, ஒரு மோதல் மையமாகி, சர்ச்சையாகி, திருச்சபைக்குள் குழப்பங்களுக்கு வழிவகுத்தது. கி.பி.1610, கி.பி.1617, கி.பி.1618 ஆகிய ஆண்டுகளில் இதுகுறித்த விசாரணைகள் திருச்சபையில் நடந்தன.

கி.பி.1609ல் ஈஸ்டர் சமயம், நோபிலி 8 உயர்சாதியினருக்கு ஞானஸ்நானம் அளித்தார். இந்த மதமாற்ற ஞானஸ்நானத்தின் எண்ணிக்கை பின்னர் 50 ஆகியது; சில நாட்களில், மேலும் 12 மதமாற்ற ஞானஸ்நானம் செய்வதாக மாகாண தலைமைக்கு நோபிலி கடிதம் எழுதினார். அதில் முக்கியமான நபர் நோபிலியின் அன்பான சமஸ்திருத ஆசிரியர் சிவதர்மா ஆவார்.

புகார்கள், விசாரணைகள் மற்றும் விவாதங்களுக்குப்பின, தனது அணுகுமுறையை செயல்படுத்துவதில் நோபிலி வெற்றி பெற்றார். திருச்சபையும், பிராமணர்களை மதம் மாற்று வதற்கான ‘இணக்க-முறை’யை அனுமதித்தது. முறையான அனுமதி இருந்தபோதிலும், மதுரை மிஷனின் ‘இணக்க-முறை’யை சுற்றியுள்ள விவாதம் தொடர்ந்தது. கலாச்சாரத்தழுவல் மற்றும் மதமாற்றப் பிரச்சினைகளை இந்த மிஷன் தொடர்ந்து சந்தித்து வந்தது. இது, இந்திய ஜேசுயிட் மிஷனின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நீண்டகால வழக்கு-விவாதமாகவும், பின்னர் ஆய்வாக வும் மாறியது. மட்டுமல்ல, இது பிற்கால மஷனரி-உத்திகளை மிகவும் பாதித்தது.



இந்திய கிறிஸ்தவ திருச்சபை வரலாறு தொடரும்...
Author: Dr. Mrs. Salomi Manohar
Asst. Professor Rtd., (Pope’s College, Sawyerpuram) Thiruvanmiyur, Chennai. South India