Vedha Aratchi
EPISODE-109
June 2026
சங்கீதங்கள் கற்றுத்தரும் விலையேறப்பெற்ற சத்தியங்கள்

AUTHOR: REV.DR. D.SURESH RAJAN

சங்கீதம் - 109

முன்னுரை:

இது மிகவும் உணர்ச்சிபூர்வமான மற்றும் சிந்திக்க வைக்கும் சங்கீதங்களில் ஒன்றாகும். இது ஒரு ‘சாப சங்கீதம்’ (IMPRECATORY PSALM) என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில், இதில் எதிரிகளின்மேல் தீர்ப்பெழுத விரும்பும் விண்ண்பங்கள் இதில் உள்ளன. இச்சங்கீதத்தை எழுதியவர் தாவீது என்று பாரம்பரியமாக கருதப்படுகிறது. புதிய ஏற்பாட்டிலும் இந்த சங்கீதம் யூதாஸ் இஸ்காரியோத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது. அப்.1:20ல் பேதுரு, சங்கீதம்-109:8ஐ மேற்கோள் காட்டுகிறார்: “அவனுடைய நாட்கள் கொஞ்சமாய் இருக்கக்கடவது; அவனுடைய உத்தியோகத்தை வேறொருவன் எடுத்துக் கொள்ளக்கடவன்.” இதன் மூலம் தாவீது அனுபவித்த துரோகம், கிறிஸ்து வுக்கு எதிரான துரோகத்தின் முன்னறிவிப்பாகவும் பார்க்கப்படுகிறது. இச்சங்கீதம் துன்பம், ஜெபம், நீதி, மனித பலவீனம் மற்றும் கடவுளின் உண்மைத்தன்மை குறித்து முக்கியமான உண்மைகளை கற்றுத்தருகிறது. மேலும் இது கிருபை, மன்னிப்பு மற்றும் கடவுளின் நீதியில் நம்பிக்கை வைக்கும்படி அழைக்கிறது.

1. உதவிக்கான தாவீதின் கூக்குரல்: (வச.1 - 5)

“என் புகழ்ச்சிக்குரிய இறைவா, மௌனமாய் இராதேயும்.” (வச.1). துன்பத்திலும் தாவீது கடவுளை ‘புகழ்ச்சிக்குறிய கடவுள்’ என அழைக்கிறார். சூழ்நிலை மோசமாக இருந்தாலும் ஆண்டவரை எப்பொழுதும் புகழ வேண்டும்.

“தீயோரும் வஞ்சனை செய்வோரும் எனக்கெதிராய்த் தம் வாயைத் திறந்துள்ளனர்... ...அவர்கள் காரணமின்றி என்னைத் தாக்குகின்றனர். நான் காட்டிய அன்புக்குக் கைமாறாக என்மேல் குற்றஞ்சாட்டினர்: நானோ, அவர்களுக்காக மன்றாடினேன்” (வச.2-4), என தாவீது தனது வேதனையை விளக்குகிறார். இதே செயலை இயேசுவும் செய்ததை, “பிதாவே, இவர்களை மன்னியும்; தாங்கள் செய்கிறது என்னவென்று அறியாதிருக்கிறார்கள்.” (லூக்.23:34) என்ற வசனம் நமக்கு சொல்கிறது.

2. வஞ்சனை செய்வோருக்கு எதிரான வேண்டுதல்: (வச.6 - 20)

இது, இச்சங்கீதத்தின் மிகவும் கடினமான பகுதியாகும். இங்கு தாவீது, பொய்-குற்றச்சாட்டுகள், வெறுப்பு, துரோகம் மற்றும் அநீதி ஆகியவற்றால் வேதனைக்குட்பட்டு கடவுளை நோக்கி கதறுகிறார். இச்சங்கீதம், வெளித் தோற்றத்தில் மிக கடினமாக தோன்றும். குறிப்பாக எதிரிகளுக்கு தீர்ப்பு வரும்படி சொல்லும் பகுதிகள் மிகவும் கடுமையாக தோன்றும். சிலுவைக்கு முன்பு “கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல்” என்ற நியதி இருந்த பழைய ஏற்பாட்டின் நாட்களில், இதுபோன்ற மொழிநடை ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் ஆழமாக ஆராயும்போது, பழிவாங்கா மல் தன் வேதனையை கடவுளிடம் ஊற்றுகிற ஒரு விசுவாசியின் இருதயத்தை இங்கு நாம் காண்கிறோம். பரிசுத்தம் என்பது உணர்வுகள் இல்லாத நிலை அல்ல; அது, எல்லா உணர்வுகளையும் கடவுளிடம் ஒப்புக்கொடுத்த நிலை ஆகும். தாவீது தனது வேதனையை கடவுளிடம் கொண்டு செல்கிறார். அவர் வன்முறையில் ஈடுபடாமல், தனது கோபத்தையும் வேதனை யையும் கடவுளிடம் வெளிப்படுத்துகிறார். அவர், தன் எதிரிகளை பழிவாங்க வில்லை. இங்கு, “பழிவாங்குவதும் கைம்மாறு அளிப்பதும் எனக்கு உரியன” என்ற வசனம், நினைவு கூரத்தக்கது (ரோம.12:19).

3. இரக்கத்திற்கான வேண்டுதல்: (வச.21 - 29)

இந்த பகுதியில் தாவீது மீண்டும் கடவுளின் இரக்கத்தை நாடுகிறார். “ஆனால், என் தலைவராகிய கடவுளே! உமது பெயரை முன்னிட்டு என் சார்பாகச் செயல்படும்! உமது பேரன்பின் பொருட்டு என்னை மீட்டருளும்!” (வச.21) தாவீது தன் நீதியைச் சொல்லிக்கொள்ளவில்லை. அவர் கடவுளின் இரக்கத்தையே நம்புகிறார். “நானோ எளியவன்: வறியவன்: என் இதயம் என்னுள் புண்பட்டுள்ளது. மாலைநேர நிழலைப்போல் நான் மறைந்து போகிறேன்: வெட்டுக் கிளியைப்போல நான் காற்றில் அடித்துச் செல்லப்படுகின்றேன். நோன்பினால் என் முழங்கால்கள் தளர்வுறுகின்றன: என் உடல் வலிமை இழந்து மெலிந்து போகின்றது. நானோ அவர்களது பழிச்சொல்லுக்கு உள்ளானேன்: ஆண்டவரே! என் கடவுளே! எனக்கு உதவியருளும்! உமது பேரன்பிற்கேற்ப என்னை மீட்டருளும்!” (வச.22-26) என்று அவர் தனது நிலையை விவரிக்கிறார். துன்பம் மனிதனின் மனதை, உடலை, சமூக உறவுகளை, ஆவிக்குரிய வாழ்வு என அனைத்தையும் பாதிக்கிறது. இப்படிப்பட்ட சூழநிலை யிலும் தாவீது இறைவனது உதவிக்காக வேண்டுதல் செய்கிறார்.

எலியா, எரேமியா, பவுல் ஆகிய தேவமனிதர்களும் மனச்சோர்வை அனுபவித்தனர். பரிசுத்த வாழ்வு என்பது பலவீனத்தை மறைப்பது அல்ல; கடவுளை சார்ந்து வாழ்வதாகும். கர்மேல் மலையில் பெரிய வெற்றிபெற்ற பிறகும் எலியா கர்த்தருக்குப் பயந்து மனமுடைந்தார் ஆகையால், கடவுள் அவருக்கு ஓய்வளித்து, உணவளித்து. உற்சாகமளித்து புதிய தரிசனத்தையும் அவருக்கு அளித்தார்.

முடிவுரை: (வச.30-31)

“என் நாவினால் ஆண்டவரைப் பெரிதும் போற்றிடுவேன்; பெரும் கூட்டத்திடையே அவரைப் புகழ்ந்திடுவேன். ஏனெனில், வறியோரின் வலப்பக்கம் அவர் நிற்கின்றார்: தண்டனைத் தீர்ப்பிடு வோரிடமிருந்து அவர்களது உயிரைக்காக்க நிற்கின்றார்.” (வச.30,31)

இச்சங்கீதம் இறை புகழ்ச்சியோடு முடிகிறது. தாவீது தனது குறைகளில் தொடங்கி நம்பிக்கையில் முடிக்கிறார். காரணம், கடவுள் ஏழைகளின் பக்கத்தில் நிற்கிறார். மனிதர்கள் கைவிடலாம், நண்பர்கள் துரோகம் செய்யலாம், எதிரிகள் குற்றம் சாட்டலாம், ஆனால் கடவுள், தம் மக்களை கைவிடவேமாட்டார். இறையாசி உங்கள் அணைவரோடும் இருப்பதாக.

சங்கீதங்கள் கற்றுத்தரும்விலையேறப்பெற்ற சத்தியங்கள். தொடரும்......



ஆசிரியர்: அருட்திரு. அறிவர். டி. சுரேஷ் ராஜன்,
தலைவர் (இந்திய மறை மாநாடு), குளோபல் மெத்தடிஸ்ட் திருச்சபை.

AUTHOR: REV. DR. D. SURESH RAJAN,
CONFERENCE SUPERINTENDENT, INDIA ANNUAL CONFERENCE, GLOBAL METHODIST CHURCH IN INDIA.