AUTHOR: REV.SJD Dharmaraja
தேவனுடைய நடைகளை கண்டார்கள்; என் தேவனும் என் ராஜாவும் பரிசுத்த ஸ்தலத்திலே நடந்துவருகிற நடைகளையே கண்டார்கள். சங்.48:14.
சங்கீதம்-68, கடவுளின் கம்பீரமான நடையை விவரிக்கும் ஒரு பாடல் இது. கடவுள் எழுந்தருளும்போது, எதிரிகள் புகைபோல் கலைந்து, மெழுகுபோல் உருகி அழிவார்கள் என்று சொல்லி, கடவுளை ஆதரவற்றோரின் பாதுகாவலராக போற்றுகிறது. மட்டுமல்ல, கடவுளின் தெய்வீக வல்லமை மற்றும் ராஜரீக மகத்துவத்தின் மீது கவனம் செலுத்த நம்மை அழைக்கிறது.
ஆதரவற்றோரின் பாதுகாவலர்:
(வச.5,6) “தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாய் இருக்கிறார்.”
கடவுள் தூரத்திலுள்ள, அணுக முடியாத, ஒரு ஆட்சியாளர் அல்ல; அவர் ஒடுக்கப்பட்டவர்கள் மீது அக்கறை உடையவர். நாம்
ஒடுக்கப்படும்போது அல்லது கைவிடப் படும்போது அவருடைய இதயம் நமக்காக இளகுகிறது. உடைந்துபோன குடும்பங்களையும்
சமூகங்களையும் சீர்செய்வதில் அவர் வல்லவர்.
பாரம் சுமப்போரின் உதவியாளர்: (வச.19) “நம்மேல் பாரம் சுமத்தினாலும், இட்சிக்கிற தேவன் அவரே” நம் வாழ்வின் பாரங்களை, கவலைகளை, பொறுப்புகளை நாம் தனியாகச் சுமக்க வேண்டியதில்லை. இவ்வசனத்தில் ‘எந்நாளும்’ என்ற வார்த்தையைக் கவனியுங்கள். அவருடைய கிருபை என்பது ஒருமுறை நிகழும் நிகழ்வல்ல, மாறாக அது வருடத்தின் 365 நாட்களிலும் நம்மைத் தொடரும் பெலனாகும். ஆகவே, நம் மன அழுத்தங்களை இப்பொழுதே கடவுளின் வல்ல கரங்களில் ஒப்படைத்து மகிழுவோம்.
வல்லமை-மாட்சிமை நிறைந்தவர்: (வச.7, 8) “தேவனாகிய உமக்கு முன்பாக பூமி அதிர்ந்தது; வானமும் பொழிந்தது; இஸ்ரவேலின் தேவனுக்கு முன்பாக இந்தச் சீனாய்மலையும் அசைந்தது.” தேவன் இஸ்ரவேலரை வனாந்தரத்தின் வழியே வழிநடத்தி, வறண்டதும் சோர்வுற்றதுமான நிலங்களில், அவர்களுக்குத் தேவையானவற்றை அளித்தது போலவே, அவர் உங்களுக்கு முன்பாகவும் தீவிரமாகச் சென்றுகொண்டிருக்கிறார். வானங்களுக்கு மேலாக உயர்ந்த அவரு டைய மாட்சிமை மகத்துவத்தின் முன்பாக எந்தத் தடையோ, நெருக்கடியோ, பிரச்சனையோ கடினமானதே அல்ல என்பதை, ‘பூமி-அதிச்சி’ உருவகம் நமக்கு நினைப்பூட்டுகிறது.
சங்கீதம்-68ன் முடிவு ‘துதி’ ஆகும். ‘தேவனுக்கு ஸ்தோத்திர முண்டாவதாக’ என சொல்வதே நம் உண்மையான பெலனாகும். இதை உணர்ந்து, கடவுள் மீதான நம் கண்ணோட்டத்தை சீர் படுத்துவோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா, ஊழிய இயக்குநர்
இரட்சிப்பு ஊழியங்கள், சென்னை-93, தென்னிந்தியா