AUTHOR: REV.DR. D.SURESH RAJAN
சங்கீதம் - 110முன்னுரை:
இது தாவீதின் சந்ததியில் பிறக்கவிருந்த மேசியா வாகிய இயேசுவைக்குறித்த தீர்க்கதரிசன சங்கீதங்களில் (MESSIANIC PSALMS) ஒன்றாகும். இயேசு, பேதுரு, பவுல் மற்றும் எபிரெயர் நிருபத்தின் ஆசிரியர் ஆகியோர் இதை கிறிஸ்துவின் நிறைவேறுதலாக கூறுகின்றனர். இச்சங்கீதம் கிறிஸ்துவை அரசர் (KING), நித்திய குரு (PRIEST), நீதியுள்ள நீதிபதி (JUDGE) என வெளிப்படுத்துகிறது. எனவே, இது கிறிஸ்துவின் ஆட்சி, மற்றும் மகிமையான வருகையை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான சங்கீதமாகும்.
1. மேன்மைப்படுத்தப்பட்ட அரசர்: (வச.1) யெகோவா, என் ஆண்டவரிடம் சொன்னது: “நான் உமது பகைவரை உமது கால்களுக்குப் பாதபடி ஆக்கும் வரை நீர் என் வலதுபக்கத்தில் அமர்ந்திரும்.” (வச.1 TCV) என்ற வசனத்தில், இரண்டு நபர்கள் குறிப்பிடப்படுகின்றனர். முதலவர் ‘யெகோவா’ (YHWH), அதாவது பிதாவாகிய தேவன். இரண்டாமவர், ‘ஆண்டவர்’ இது மேசியாவைக் (MESSIAH) குறிக்கிறது. தாவீது அவரை ‘என் ஆண்டவர்’ என அழைப்பது ஆச்சரியமானது. ஏனெனில், யூதர்கள் பார்வையில், தாவீதின் குமாரனாக இருக்க வேண்டிய மேசியாவை, தாவீதே ‘ஆண்டவர்’ என அழைக்கிறார். இயேசு இதை மேற்கோள்காட்டி பரிசேயர்களிடம். “தாவீது அவரை ஆண்டவர் என அழைக்கும்போது, அவர் அவனுக்கு எப்படி மகனாக இருக்க முடியும்?” (மத்.22:45 TCV) எனக் கேட்டார்; அதற்கு பரிசேயர்களால் பதிலளிக்க இயலவில்லை. ஆக, மேசியா தாவீதின் சந்ததியில் பிறந்தாலும், தமது தெய்வீக இயல்பில் தாவீதின் ஆண்டவராக இருக்கிறார். அரசரின் வலதுபுறத்தில் அமர்வது மரியாதை, அதிகாரம், மற்றும் மகிமையின் அடையாளம் ஆகும். இயேசு, சிலுவையில் மீட்புப்பணியை நிறைவேற்றி, உயிர்த்தெழுந்து பரலோகம் சென்று, பிதாவின் வலதுபக்கத்தில் அமர்ந்தது (எபி.10:12,மாற்.16:19) இத்தீர்க்கத்தரிசனத்தின் நிறைவாகும். மேசியா குறித்து வச.3 கூறுவது: “நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில் வைகறை கருவுயிர்த்த பனியைப்போல உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர்” (வச.3 TCV). இயேசு, தம்மைப் பின்பற்றும்படி மக்களை வற்புறுத்தவில்லை; மாறாக, பரிசுத்த ஆவியானவர் இருதயத்தை மாற்றி, அவர்கள் மனமுவந்து கிறிஸ்துவுக்காக வாழும்படி செய்கிறார். இதனை ஜான் வெஸ்லி, “தேவகிருபை மனிதனின் இருதயத்தை மாற்றுகிறது; அதன் விளைவாக அவன் மகிழ்ச்சியோடும் சுதந்திரத்தோடும் தேவனைச் சேவிக்கிறான்.” எனக் கூறுகிறார்.
2. நித்திய ஆசாரியராகிய மேசியா: (வச.4) “மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே என்று
ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார்; அவர் தம் மனத்தை மாற்றிக் கொள்ளார்.” இங்கு, மேசியா அரசர் மற்றும் குருவாக
வெளிப்படுத்தப்படுகிறார். மனிதர்கள் மாறலாம்; அரசுகள் மாறலாம்; தலைவர்கள் மாறலாம்; ஆனால் இறைத்தீர்மானம் ஒருபோதும்
மாறாது. எனவே, கிறிஸ்துவின் குருத்துவம் நிரந்தரமானதும் மாறாததுமாகும்.
பழைய ஏற்பாட்டு லேவிய ஆசாரியத்துவத்தில் பின்வரும் வரம்புகள் இருந்தன.
(அ) ஆசாரியரும் பாவிகளே; எனவே, மற்றவர்களுக்காக பலி செலுத்தும் முன் தங்களுடைய பாவங்களுக்காக பலி செலுத்த
வேண்டியிருந்தது.
(ஆ) ஆசாரியர் செலுத்திய பலிகள் தற்காலிகமானவை. எருதுகள் மற்றும் ஆடுகளின் இரத்தம் பாவத்தை முற்றிலும் நீக்க
முடியவில்லை.
(இ) ஆசாரியர் மரித்தனர் ஆகவே, ஒரு பூரண ஆசாரியர் தேவைப்பட்டார்.
மெல்கிசேதேக்கு: அவர், சாலேமின் ராஜா, உன்னதமான இறைவனுடைய ஆசாரியன், ஆபிரகாம் போரில் வெற்றி பெற்று திரும்பியபோது,
மெல்கிசேதேக்கு அவரை ஆசீர்வதித்தார். ஆபிரகாம் அவருக்கு தசமபாகம் கொடுத்தார். அவருடைய வம்சாவளி குறிப்பிடப்
படவில்லை. அவருடைய பிறப்பு-மரணம் பதிவு செய்யப்படவில்லை. ஆகவே, அவர் நித்திய ஆசாரியத்துவத்திற்கு ஒரு
முன்மாதிரியாக (TYPE) நிற்கிறார் (ஆதி.14:18-20).
இயேசுவினுடைய ஆசாரியத்துவத்தின் மேன்மைகள்: இயேசு லேவி கோத்திரத்தவர் அல்லர்; யூதா கோத்திரத்தவர். மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி அவர் ஆசாரியர் ஆகமுடியாது. ஆனால் கடவுள் அவரை உயர்ந்த ஆசாரிய வரிசையான மெல்கிசேதேக்கின் வரிசையில் நியமித்தார். இயேசு, தம்மையே பலியாக கொடுத்தார் (எபி.9:14). இயேசுவின் பலி, ஒருமுறை போதுமானது (எபி.10:14). இயேசு, எப்போதும் உயிரோடிருக்கிறார் (எபி.7:24), இயேசு எப்போதும் நமக்காக பரிந்துபேசுகிறார் (எபி.7:25, 1யோவா.2:1)
3. நியாயாதிபதியான மேசியா: (வச.5,6,7)
மற்றும் உலகத்தின்மீதான அவரது இறுதி நியாயத்தீர்ப்பை விவரிக்கிறது. “என் தலைவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்; தம் சினத்தின் நாளில் மன்னர்களை நொறுக்குவார்.” (வச.5 TCV). முதல் வருகையில் அவர் தாழ்மையின் ஊழியராக வந்தார்; பாவிகளுக்காக தம்மை ஒப்புக்கொடுத்தார்; ஆனால், 2ம் வருகையில் அவர் ராஜாதி ராஜாவாக, கர்த்தாதி கர்த்தராக வருவார். அவருடைய அதிகாரத்திற்கு எதிராக நிற்கும் எந்த ஆட்சியும்;, எந்த வல்லமையும் நிலைத்திராது. “வேற்று நாடுகளுக்கு அவர் தீர்ப்பளித்து அவற்றைப் பிணத்தால் நிரப்புவார்; பாருலகெங்கும் தலைவர்களை அவர் நொறுக்குவார்” (வச.6 TCV) என்பது இறுதி நியாயத்தீர்ப்பைக் குறிக்கிறது. “வழியில் உள்ள நீரோடையிலிருந்து அவர் பருகுவார்; ஆகவே அவர் தலைநிமிர்ந்து நிற்பார்” (வச.7 TCV) என்பது, போரில் வெற்றிபெற்று முன்னேறும் அரசன், வழியில் ஓடையிலிருந்து தண்ணீர் குடித்து மீண்டும் உற்சாகத்துடன் தனது பயணத்தைத் தொடர்வதை அழகாக உருவகப்படுத்துகிறது. “அவர் தலைநிமிர்ந்து நிற்பார்” என்பது முழுமையான வெற்றியின் அடையாளமாகும்..
முடிவுரை: அன்பர்களே! கிறிஸ்து உங்கள் வாழ்வில் அரசராக நீதியுள்ள நியாயாதிபதியாக உள்ளாரா? (பிலி.2:9,10,11). நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியும் அவரது ஆட்சிக்குக் கீழ்ப்பட்டிருக்கவேண்டும். ஆண்டவருக்கு அஞ்சி தூயவாழ்வு வாழ விரும்புகிறிர்களா? (2பேது.3:11); ஆண்டவர்தாமே, அவருக்கு பிரியமாய் வாழ நமக்கு அருள்புரிவாராக. ஆமென்.
சங்கீதங்கள் கற்றுத்தரும்விலையேறப்பெற்ற சத்தியங்கள். தொடரும்......
ஆசிரியர்: அருட்திரு. அறிவர். டி. சுரேஷ் ராஜன்,
தலைவர் (இந்திய மறை மாநாடு), குளோபல் மெத்தடிஸ்ட் திருச்சபை.
AUTHOR: REV. DR. D. SURESH RAJAN,
CONFERENCE SUPERINTENDENT, INDIA ANNUAL CONFERENCE,
GLOBAL METHODIST CHURCH IN INDIA.