AUTHOR: REV.SJD Dharmaraja
உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது. சங்.91:7
சங்கீதம்-91, ‘ராணுவ வீரர்களின் சங்கீதம்’ என்றழைக்கப்படுகிறது. இது, தெய்வீக பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சக்திவாய்ந்த ஒரு பாடலாகும். இதன் வாக்குறுதி களை, வரலாற்றில், படைவீரர்கள், மதகுருமார்கள் மற்றும் விசுவாச கூட்டத்தார் ஆபத்திற்கு எதிரான ஒரு கேடயமாகப் பயன்படுத்தியுள்ளனர். தேவபிரசன்னத்தில், நமக்கு அசைக்கமுடியாத அடைக்கலம் உண்டு என்பதற்கு இது, காலத்தால் அழியாத ஒரு நினைவூட்டலாக அமைந்துள்ளது.
வசனம்: “நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்” (வச.2) என்பது படைவீரனின் விசுவாசமாகவும், “உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலது புறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது” (வச.7) என்பது வீரனின் பாதுகாப்புக்கான கடவுளின் வாக்குறுதியாகவும் இங்கு காணப்படுகிறது.
சிந்தனை: (வச.19)போர்வீரர்கள் இளைப்பாறி, தங்களைத் தேற்றிக்கொண்டு, பகைவரை எதிர்த்து உறுதியாய் செயல்பட புகலிடம் அவசியம்.ஆகவே, ‘அடைக்கலம்’ ‘கோட்டை’ ஆகியவற்றின் மதிப்பை ஒரு போர் வீரன் நன்கு அறிவான்.ஆவிக்குறிய வாழ்வில், கடவுளை நம் புகலிடமாகக் கொள்ளுமாறு இச்சங்கீதம் நம்மை ஏவுகிறது. நெருக்கடி, கவலை, சந்தேகம், பயம் போன்ற ஆவிக்குறிய போராட்டங்களில், நமது பலம், நமது பணம், நமது அந்தஸ்து போன்றவற்றுக்குள் தஞ்சம் அடைவது மிக எளிது; ஆனால், சங்கீதக்காரரோ, இங்கு அசைக்கமுடியாத ஒரு கோட்டையை நமக்கு காட்டுகிறார். நாம் கடவுளின் அடைக்கலத்தில் தங்கும்போது, வாழ்வின் பிரச்சனைகள், நம் இருதயத்தின் மீதான தம் பிடியை இழக்கின்றன. ஆகவே, நாம் நமது சொந்தக் கவசங்களால் மட்டுமல்ல, சர்வவல்ல தேவனின் இறக்கைகளாலும் மூடப்படுகிறோம்.
பரிசோதனை: நம் போராட்டங்கள் எத்தனை பெரிதாயிருந்தாலும், ஒரு கணம் நிதானித்து, தேவனை நமது கேடயமாக்கி, அவரை நம் அரண் ஆக்கி அவர் தரும் பாதுகாப்பை எதிர்நோக்கிக் காத்திருப்போம்.
ஜெபம்: . ஆண்டவரே! வாழ்வின் போராட்டங்களில் உமது நிழலில் தங்க விரும்புகிறேன். என் ஆபத்து நேரத்தில் நீர் என் அடைக்கலமாய் இருந்து, என்னைப் பாதுகாக்கிறீர் என்று நம்பி, விசுவாசத்தில் உறுதியாக நிற்க எனக்கு உதவிசெய்யும். இயேசுவின் நாமத்தில், ஆமென்.
அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா, ஊழிய இயக்குநர்
]
இரட்சிப்பு ஊழியங்கள், சென்னை-93, தென்னிந்தியா