சகோ. எம். அசரியா ஞானதாஸ் எம்.ஏ; எம்.எட்
பெங்களுர் நகரில் HARRY என்னும் ஒரு போதகர் சபை நடத்தி வந்தார். அவர் வேத சத்தியத்தை உள்ளபடி போதித்தபடியால் திரளான மக்கள் அவரது சபைக்கு வந்தனர். HARRY இயேசுவின் அன்பை அறிவித்ததோடு, எந்நிலையிலும் சபையார் உண்மையை கடைபிடிக்கவேண்டும் என ஆணித்தரமாக போதித்து வந்தார். குறிப்பிட்ட ஞாயிறு ஆராதனையில் உண்மையை கடைபிடிப்பது குறித்து எச்சரிப்பின் செய்தி கொடுத்தார். அவரது சபையில், மற்றவர்களை குறைகூறி இன்பங்காணும் இருவர், HARRYயின் செய்திகேட்டு வெறுப்புற்று, போதகரிடம் எப்படியாவது குறை கண்டுபிடிக்கவேண்டும் என திட்டம் தீட்டினர்.
ஒரு நாள் அவ்விருவரில் ஒரு நபர், போதகர் வீட்டிற்கு சென்று, “போதகர் ஐயாவை பார்க்கவேண்டும்” என கூற, போதகரின் மனைவி, “ஐயா வெளியே சென்றுள்ளார், மாலையில் வந்துவிடுவார்” என கூறுகிறார். இதைக் கேட்ட அந்த நபர், போதகரின் செருப்பை வாசலில் பார்த்துவிடவே, “போதகர் வீட்டில்தான் இருக்கிறார்; அவரது மனைவி பொய் சொல்கிறார்” என எண்ணிக் கொண்டு, அடுத்த நபரிடம், “நீங்கள் போதகரை பார்த்து வாருங்கள்” எனச் சொல்லி அனுப்பிவைக்கிறார். இரண்டாம் நபருக்கும், “ஐயா வெளியே சென்றுள்ளார்” என செய்தி கிடைக்க, அவரும் போதகரின் செருப்பை வாசலில் பார்த்து, “போதகர் வீட்டுக்குள்தான் இருக்கிறார்” என முடிவு செய்கிறார்.
பின்னர் இருவரும், “போதகரை கையும்-களவுமாக பிடிக்கவேண்டும்” என திட்டமிட்டு தெருவில் காத்திருக்க, போதகர் HARRY காலில் காயத்துடன் வெளியில் இருந்து வீட்டுக்கு வெறுங்காலில் நடந்துசெல்கிறார். இதைக்கண்டு, அந்த இருவரும் வெட்கித் தலைகுனிகின்றனர். தவறை உணர்ந்து போதகரிடம் மன்னிப்பு கேட்டு தங்கள் தீயபழக்கத்தை விட்டு மனந்திருந்தி வாழலாயினர்.
பிரியமானவர்களே! நம் வாழ்விலும் நாம் நமது குற்றங்களை உணர்வதோடு, பிறர்-குறை காண்பதை விட்டுவிட வேண்டும். பிறரை குறைகூறும்போது, நாம் தேவனிடமிருந்து ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ள முடியாது என்பதை உணர்ந்து, மனந்திரும்பி மேலான ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்வோம். வேதம் இவ்விதமாய்ச் சொல்லுகிறது:
மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். மத்-7:1.
நமது இருதயமே நம்மைக் குற்றவாளியாக தீர்க்கும். 1யோவா-3:20
உன் சகோதரனை குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? ரோம-14:10
மற்றவர்களைக் குற்றவாளியாக தீர்க்கிறவனே, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை.
ரோமர்-2:17.