AUTHOR: REV.DR. D.SURESH RAJAN
சங்கீதம் - 104முன்னுரை:
அன்பான இரட்சிப்பு வாசகர்கள் யாவருக்கும் எமது கும்பத்தினரின் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். 2025ல் நம்மை கண்ணின் கருவிழிபோல் காத்த கடவுள், இந்தப் புதுவருடத்திலும் நம்மை பத்திரமாய் பாதுகாத்து வழிநடத்துவார்.
நம்மை சுற்றி இருக்கும் இறைவனின் படைப்பாகிய உலகத்தை கவனமாகப் பார்த்தால், நாம் ஆண்டவரைப் போற்றாமல் இருக்கமுடியாது. நாம் பிரார்த்தனை செய்யும்போது நம் கவலைகளை, தேவைகளை, கடவுளிடம் சொல்கிறோம்; ஆனால், இந்த திருப்பாடலில் சங்கீதக்காரர் முதலில் இறைவனை போற்றுகிறார். “என் உயிரே, கடவுளைப் போற்று! என் ஆண்டவராகிய கடவுளே, நீர் மிகப் பெரியவர்.” (வச 1).
அன்பான இறைமக்களே! நமக்கு இறைவன் ஈகையாக அளித்துள்ள வெளிச்சம், காற்று, தண்ணீர், உணவு, வேலை, ஓய்வு, மூச்சு என எல்லாவற்றிலும் ஆண்டவரின் செயலைப் உற்றுநோக்க இந்தத் திருப்பாடல் நம்மை அழைக்கிறது.
1. ஆண்டவர் மிகப் பெரியவர்: (வச.1 - 9)
இந்தத் திருப்பாடலில், ஒளியை ஆடையாக உடுத்தியவர், வானத்தைப் பரப்பியவர், மேகங்களை வாகனமாக கொண்டவர், காற்றின் மேல் செல்பவர் என ஆண்டவரைக் குறித்து பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதை காணலாம். காலையில் சூரியன் மெதுவாக எழும்பும்போது, வசந்தமான காற்று வீசும்போது, மழைக்குப்பிறகு பசுமை தெரியும்போது, பெருங்கடலின் ஓசை கேட்கும்போது நம்மையும் அறியாமல் நமக்குள் இறைவனது மகத்துவத்தை, வல்லமையை உணர முடிகிறது. இவையெல்லாம் சிலர் கூறுவதுபோல தானாக நடப்பவை அல்ல. இவை, ஆண்டவர் எவ்வளவு பெரியவர் என்பதை நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன.வானங்கள் கடவுளின் பெருமையை அறிவிக்கின்றன. (தி.பா.19:1), மண்ணுலகம் முழுதும் அவரது மாட்சியால் நிறைந்துள்ளது (ஏசா.6:3) என்றும் நிலைக்கும் கடவுளின் தன்மையும், அவரது வல்லமையும் உலகப் படைப்பு முதல் அவருடைய செயல்கள் வடிவில் நம் மனக்கண்களுக்கு தெளிவாய்த் தெரிகின்றன (ரோம.1:20) என்று திருமறை கூறுகிறது.
ஒரு வீட்டைப் பார்த்தால் அந்த வீட்டை கட்டியவரை நினைப்பது போல, படைப்பைப் பார்க்கும்பொழுதெல்லாம் படைத்த ஆண்டவரை நினைக்கவேண்டும். நாம் கவலைப்படும்போது, ஆண்டவர் எவ்வளவு பெரியவர் என்பதை மறந்து விடுகிறோம். இந்த உலகத்தையே படைத்து பராமரிக்கும் ஆண்டவர், என் வாழ்க்கையையும் நடத்த முடியும் என்று நாம் நம்பவேண்டும்.
2. ஆண்டவர் நல்லவர்: (வச.10 - 23)
ஆண்டவர் பெரியவர் மட்டுமல்லர், அவர் நல்லவருமாவார். அவர் படைத்துவிட்டு விலகிப் போகவில்லை; மாறாக, தமது படைப்புகள் எல்லாவற்றையும் அவர் கவனித்துக்கொண்டி ருக்கிறார். ஆண்டவர் விலங்கினங்களுக்கு மேய்ச்சல் மற்றும் தண்ணீர், மனிதர்களுக்கு உணவு மற்றும் மனதை மகிழ்விக்கும் பானம் என அனைத்து தேவையான நன்மைகளையும் அருளுகிறார். கடவுள் எல்லாருக்கும் நல்லவர் (தி.பா.145:9), அவர் எல்லா உயிர்களுக்கும் உணவு தருகிறார் (தி.பா.136:25), உங்களுக்கு என்ன தேவை என்று உங்கள் பரலோகத்தந்தை அறிந்திருக்கிறார் (மத்.6:32) என்று திருமறை நமக்கு கூறுகிறது.
கிராமத்தின் பொதுக்கிணறுபோல், ஆண்டவர் தரும் நன்மைகள் எல்லாருக்கும் பொதுவானவை. பறவைகளும் விலங்குகளும் அதில் தாகம் தீர்க்கின்றன, நாமும் அதில் பயன்பெறுகிறோம். ‘வானத்துப் பறவைகளைப் பாருங்கள்; உங்கள் பரலோகத்தந்தை அவைகளுக்கு உணவுதருகிறார்’ (மத்.6:26).
அன்பானவர்களே! ஆண்டவர் இவ்விதமாய், நம் அன்றாட வாழ்வின் தேவைகளை சந்திக்கிறார்; இதற்காக நாம் அவருக்கு நன்றி சொல்லுகிறோமா?
3. ஆண்டவர் அருகிலிருக்கிறவர்: (வச. 24:30)
ஆண்டவர் நாம் கண்டுபிடிக்க முடியாத தூரத்தில் இல்லை; அவர், நமது அருகிலேயே இருக்கிறார். அவரது மூச்சால் நாம் வாழ்கிறோம். ஒவ்வொரு உயிரும், உயிர்களின் ஒவ்வொரு மூச்சும், ஆண்டவரிடமிருந்து வரும் கொடை-வெகுமதி. ‘நீர் உம்முடைய ஆவியை அனுப்பினால், உயிர்கள் உருவாகின்றன’ (வச.30), ‘கடவுளின் ஆவி என்னை உருவாக்கினார்’ (யோபு.33:4), ‘அவரிலே நாம் வாழ்கிறோம், நகர்கிறோம்’ (அப்.17:28), ‘ஆண்டவர் மனிதனுக்குள் உயிர் மூச்சை ஊதினார்’ (ஆதி.2:7) என வேதவாக்கியங்கள் சான்று பகிர்கின்றன. ஆண்டவரை நம்பி வாழ்வது பலவீனம் அல்ல. அதுவே உண்மையான வாழ்வு.
முடிவுரை:
நமக்கு அருகாமையிலே இருந்து நமது தேவைகளை எல்லாம் சந்தித்து நமக்கு வாழ்வழிக்கும் இறைவனை நாம் போற்றிப்புகழக் கடமைப்பட்டுள்ளோம். இந்தத் திருப்பாடல் தொடங்கிய வார்த்தைகளிலேயே முடிவடைகிறது. ‘என் உயிரே, கடவுளைப் போற்று!’ (வச.35). நம் வாழ்வே ஒரு போற்றுதலாக மாற வேண்டும். ஆண்டவரே! உமது பெருமையைப் பார்க்க, எங்கள் கண்களைத் திறக்கவும், உமது நன்மையை நம்ப, எங்கள் உள்ளங்களை திறக்கவும் எங்களுக்குக் கற்றுத்தாரும் என வேண்டுதல் செய்வோம். கடவுள் தாமே உங்களோடிருந்து இந்த புதுவருடத்தில் உங்களை அற்புதமாய் காப்பாராக. ஆமென்..
சங்கீதங்கள் கற்றுத்தரும்விலையேறப்பெற்ற சத்தியங்கள். தொடரும்......
ஆசிரியர்: அருட்திரு. அறிவர். டி. சுரேஷ் ராஜன்,
இணை நிறுவனர், வேதாகம மொழிபெயர்ப்பு முயற்சிகள், கோயம்புத்தூர். தென்னிந்தியா.