VasanaDhyian
EPISODE-165
January 2026
புதுப்பிக்கும் புத்தாண்டு
புத்தாண்டு நல்வழித் தீர்மானங்களை எழுதிவைத்து புதுப்பித்துக்கொள்வோம்

AUTHOR: REV.SJD Dharmaraja

நாங்கள் உறுதியான உடன்படிக்கைபண்ணி அதை எழுதி வைக்கிறோம்; எங்கள் பிரபுக்களும், எங்கள் லேவியரும், எங்கள் ஆசாரியரும் அதற்கு முத்திரைபோடுவார்கள் என்றார்கள். நெகே.9:38

புத்தாண்டில் புதிய தீர்மானங்கள் எடுக்கும் உறவினர் மற்றும் நண்பர்களிடம் அவர்களுடைய தீர்மானங்களை, விசுவாசம் மற்றும் நம்பிக்கையுடன் உறுதிமொழியாக மீண்டும் சொல்லும்படி நான் கேட்டுக்கொள்வதுண்டு. அநேக நண்பர்கள் கண்ணீர்மல்க அந்த உறுதிமொழிகளைச் சொல்வதையும், அந்த உறுதிமொழி வார்த்தைகளைக் அவர்கள் சொல்கிறபோது சகவிசுவாசிகள் தங்கள் கரங்களை மார்பில் வைத்திருப்பதையும் நான் பார்த்திருக்கிறேன்.

புதுப்பிக்கப்பட்ட இஸ்ரவேலரின் உறுதிமொழிகள்: (நெகே.9:38) இஸ்ரவேலர், பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து திரும்பியதும், நெகேமியாவுடன் கர்த்தருக்குள், தங்கள் பொருத்தனை களைப் புதுப்பித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கடவுளின் சேவைக்கு மீண்டும் தங்களை அர்ப்பணிக்க ஒப்புக்கொடுத்தனர்.
இஸ்ரவேல் ஜனங்கள் கடவுளுக்கு முன்பாக நின்று, தங்கள் தலைவர்களுடன் இணைந்து, ‘தங்கள் பாவங்களை உணர்ந்து’ ‘தங்கள் தீச்செயல்களுக்காக வருந்தி’ மனந்திரும்புதலுக்கான தங்கள் உறுதிமொழியைக் எழுதிவைத்து கடைபிடிக்க சபதம் செய்தார்கள். தங்கள் உடன் படிக்கையில் அவர்கள், தங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மன தோடும், முழு பலத்தோடும் கர்த்தரை நேசிப்பதாக வாக்குறுதி அளித்தனர்.

புதுப்பிக்கப்பட்ட கடவுளின் உறுதிமொழிகள்: 2,000 ஆண்டுகளுக்கு முன், கடவுள் தம் குமாரனை அனுப்பி நமக்கான தமது வாக்குறுதிகளைப் புதுப்பித்தார். இயேசு, “பிதாவே! இவ்வுலகில் நீர் எனக்குக் தந்தவர்களுக்கு நான் உம்மை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்தார்கள்.” என யோவா.17:6ல் ஜெபித்து, கடவுளின் வாக்குத் தத்தங்களை நமக்காக மீண்டும் புதுப்பித்தார். அவ்விதமாகவே, நாமும், கடவுளுக்கு முன்பாக எடுத்துள்ள ‘புத்தாண்டு நல்வழித் தீர்மானங்களை’ எழுதிவைத்து புதுப்பித்துக்கொள்வோம்.
ஜெபம்: கடவுளே! உமக்குள் எனது புத்தாண்டு நல்வழித் தீர்மானங்களை உறுதிமொழிகளாக இன்று புதுப்பிக்கிறேன். இந்த உறுதிமொழிகளில்;;; நிலைத்திருக்க எனக்கு உதவி புரியும். இயேசுவின் நாமத்தில், ஆமென்.



அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா, ஊழிய இயக்குநர்
இரட்சிப்பு ஊழியங்கள், சென்னை-93, தென்னிந்தியா