சகோ. எம். அசரியா ஞானதாஸ் எம்.ஏ; எம்.எட்
JOSHIE என்ற தேவமனிதர் ஆண், பெண் என 2 பூனைக்குட்டிகளை நேர்த்தியாக பயிற்சியளித்து வளர்த்துவந்தார். அந்த பூனைக்குட்டி கள் அவரது பிள்ளைகளுடன் மிகவும் செல்லமாக விளையாடின. அவரது வீட்டில் பல கவலைகள், பிரச்சனைகள் நடுவில் இந்த செல்ல பூனைக்குட்டிகளின் சாகச விளையாட்டால் கவலைகளை மறந்து JOSHIE மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியாய் வாழ்ந்துவந்தனர். இரண்டு பூனைக்குட்டிகளுக்கும் ஒரே பாத்திரத்திரல்தான் பால் ஊற்றி வைப்பார்கள். ஓருவேளை முதலில் பெண் பூனைக்குட்டி பாலை குடித்தால் ஆண் பூனைக்குட்டி அசையாமல் நின்று அதைப் பார்த்துக்கொண்டிருந்து விட்டு பின்னர் பாலைக் குடிக்கும். ஒருவேளை ஆண் பூனைக்குட்டி வெளியே சென்றிருந்தால பெண் பூனைக்குட்டி பாலை உடனே குடிக்காமல் ஆண் பூனைக்குட்டி வந்தபின்னர் ஒன்று மாற்றி ஒன்றாக பாலைக்குடிக்கும். இத்தகைய அன்பை அவை பெற்றிருந்தன. இந்தப் பூனைக்குட்டிகளைப்போல், நாமும் அன்பு, பொறுமை, விட்டுக்கொடுத்தல் ஆகிய பண்புகளைக் கற்றுக் கொள்ளவேண்டியது அவசியமாகும்.
பிரியமானவர்களே! நம் வாழ்வில்கூட, இந்த மூன்று பண்புகளும் மிகவும் அவசியமானவை ஆகும். இயேசு கிறிஸ்து இவவுலகில் வாழ்ந்த நாட்களில் எல்லாவிதத்திலும் இவ்வுலக மக்களுக்கு நன்மைகளைச் செய்து, நாடு நகரெங்கும் நற்போதகங்களை வழங்கி, பார்வை அற்றோர், காதுகேளாதோர், முடவர்கள், தொழுநோயாளிகள் ஆகியோருக்கு சுகம் அளித்து, மரித்தோரை உயிரோடெழுப்பி, அநேக அற்புத-அடையாளங்களைச் செய்து தமது அன்பு, பொறுமை, விட்டுக்கொடுக்கும் தன்மை ஆகிய முன்மாதிரிகளை நமக்குக் கற்பித்திருக்கிறார். ஆனால், அவருடைய பிள்ளைகள் என சொல்லிக்கொள்ளும் நாமோ, குடும்பங்களிலும், வாழ்விடங்களிலும், பணித்தளங்களிலும், திருச்சபையிலும் பகை, விரோதம், அடிதடி, கொலை வெறி என சாத்தானின் பண்புகளோடு வாழும் அவலநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். இந்த புதிய ஆண்டில், நாம் புதிய தீர்மானங்களை எடுத்து, தேவ ஞானத்தோடு செயல்பட்டு அன்பு, பொறுமை, விட்டுக்கொடுத்தல் ஆகிய நற்பண்புகளை கடைபிடித்து, ஆண்டவர் தரும் மேலான ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வோமாக.
வேதம் இவ்வாறு கூறுகிறது:
நீங்கள் அன்பில் வேரூன்றி நிலைபெற்றிருங்கள். எபே-3:17
அன்பினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும். கலா-5:6
கிறிஸ்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல் அன்பில் நடவுங்கள். எபே-5:2