Vedha Aratchi
EPISODE-105
February 2026
சங்கீதங்கள் கற்றுத்தரும் விலையேறப்பெற்ற சத்தியங்கள்

AUTHOR: REV.DR. D.SURESH RAJAN

சங்கீதம் - 105
என் உயிரே, கடவுளைப் போற்று

முன்னுரை:

இச்சங்கீதம் ஒரு வரலாற்றுப் பதிவு; மட்டுமல்ல, இது ஆண்டவர் தம் மக்களோடு இடைபட்ட விதத்தை வெளிப்படுத்தும் சாட்சி. மனிதர் தங்கள் வாக்குறுதிகளை மறக்கலாம்; ஆனால், ஆண்டவர் தம் வாக்குகளை மறப்பதில்லை, அலட்சியம் செய்வதுமில்லை என்பதை வெளிப் படுத்தும் ஒரு அற்புதப் பாடல். இது. நம் வாழ்வில் ஆண்டவர் செய்த செயல்களை நினைவு கூர்ந்து நன்றியுடனும், நம்பிக்கையுடனும், கீழ்ப்படிதலுடனும் வாழ அழைக்கும் பாடல். இந்த திருப்பாடலின் முதல் வசனத்திலேயே அதன் முழு கருப்பொருளும் அடங்கியுள்ளது.

1. ஆண்டவரை நினைவுகூர்ந்து நன்றியுடன் வாழ அழைப்பு:

‘ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்!’ (வச.1)

நமக்கு யாராவது உதவி செய்வார்களானால் அவர்களுக்கு நன்றி செலுத்துவது நமது இயல்பு. நமது பரமதந்தையாகிய கடவுள் நமக்கு செய்த மற்றும் செய்துகொண்டிருக்கிற அனைத்து உதவிகளுக்காகவும் அவருக்கு நன்றி செலுத்துதல் என்பது மிக அவசியம். நாம் பல நேரங் களில் கடவுளின் செயலை மறந்து விடுகிறோம். நம் வாழ்வின் அனைத்து சம்பவங்களும் நமது முயற்சியால் தான் நடக்கிறது என்று எண்ணி, கடவுளுக்கு நன்றிசெலுத்த தவறி விடுகிறோம்.

‘அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்: ஆயிரம் தலை முறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார்’. (வச.8) என்று சங்கீதக்காரர் இங்கு கூறுகிறார். ஆண்டவர் தாம் சொன்ன வார்த்தையை ஒருபோதும் மறப்பதில்லை. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு தொடங்கி இன்றுவரை தலைமுறைகள் மாறினும் ஆண்டவரின் வாக்குறுதி மட்டும் மாறுவதேயில்லை. ஆகவே அவருக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும்.

அவர், பகைவரிடமிருந்து நம்மை எப்படி காக்கிறார் என்பதை வசனங்கள் 12 முதல் 15 வரை தெளிவாக காணலாம். நாம் சோர்வடைந்து, தனிமையாய் உணரும்போது பல சமயங்களில் ஆண்டவர் நம்மை கைவிட்டுவிட்டார் என்று எண்ணுகிறோம். யோசேப்பு என்ற நமது முற்பிதா அடிமையாக விற்கப்பட்டார். சிறை வாசம், அவமானம் என பல துன்பங்கள் அவருக்கு வந்தன. ‘அவருடைய கால்களுக்கு விலங்கிட்டு அவரைத் துன்புறுத்தினர். அவருடைய கழுத்தில் இரும்புப் பட்டையை மாட்டினர்’ (வச.18); அது தண்டனை அல்ல, மாறாக, ஆண்டவருடைய திட்டத்தின் ஒரு பகுதியே அது. அவருடைய துயர அனுபவங்கள், அவரை அரண்மனைக்கு உயர்த்தும் வழிகளாக மாறின. இன்று நாம் அனுபவிக்கும் சோர்வு, நாளைய உயர்வுக்கான ஆயத்தமாக இருக்கலாம்; ஆகவே, ‘எல்லாம் நம் நன்மைக்கே’ என்பதை அறிந்துணர்ந்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம்.

2. ஆண்டவரை வழிபட அழைப்பு:

‘அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்’ (வச.1) .

நம் வாழ்வின் நாயகனாகிய ஆண்டவரையே நாம் வழிபடவேண்டும். அவரே நமது வழி பாட்டுக்கு ஏற்புடையவர். நமது மூத்த தந்தையர் எகிப்தின் அடிமைத் தனத்திலிருந்து இறைவன் கொடுத்த வியத்தகு விடுதலையை மறந்துவிட்டனர். எகிப்து தேசத்தை அதிரவைத்த வாதைகள், விடுதலைப் பயணத்தில் வான மன்னா உணவு, பாறையிலிருந்து தண்ணீர், என, பல அற்புதங்களை கண்ட அவர்கள் ஆண்டவரை மறந்ததோடு, பொன் கன்றுக்குட்டியை வணங்கத் துணிகரம் கொண்டனர்.

இன்றும் நம்மில் பலர் ஆண்டவர் அருளிய மீட்பை அலட்சியம் செய்து, அவர் செய்த நன்மை களை மறந்து, அவரை வழிபடாமல் பொருட்களையும், மனிதர்களையும் (மறைமுகமாக) வழி படுகிறோம். பல நேரங்களில் பாடல்கள்தான் வழிபாடு என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளுகிறோம். ‘ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்!’ (வச.4) என்ற திரு வாக்கின்படி இன்று நம்மையும் நமது வாழ்வையும் அவருக்கு அற்பணித்து அவரையே தொழுதுகொள்ள தீர்மானம் எடுப்போம்.

3. ஆண்டவரை அறிவிக்க அழைப்பு:

‘அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள்|. (வச.1) என்று இத்திருப்பாடல் அறைகூவல் விடுக்கிறது. கடவுளிடமிருந்து ஆவிக்குரிய, மற்றும் உடல் சார்ந்த நன்மைகளை பெற்ற நாம், மற்றவர்களுக்கு ஆண்டவரின் செயல்களை அறிவிப்பது மிகவும் அவசியமாகும். நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் தனது இறுதி கட்டளையாக அனைத்துலக மக்களுக்கும் நற்செய்தி அறிவிக்குமாறு கூறியுள்ளார் (மத்.28:19-20, மாற்.16:15, லூக்.24:46-48, யோவா.20:21, அப்.1:8). ஆண்டவருடைய இந்த பெருங்கட்டளையை நாம் அலட்சியம் செய்யா மல் அவருடைய அரும்பெரும் செயல்களையும் அவர் நமது ஆத்துமாவுக்கு செய்த நன்மை களையும் அவசரமாய் அறிவிக்க வேண்டும்.

முடிவுரை:

ஆண்டவரின் செயல்களுக்கு ஒரு நோக்கம் உண்டு. திருமறையில் ஆண்டவர் செய்த அனைத்து செயல்களும் நாம் ஆண்டவரை நன்றாக அறிந்து கொள்ளவும், அவர்-வழி நடக்கவும் அவர்-புகழ் பாடவுமே என்பதை உணர்ந்தவர்களாக நம்பிக்கையோடு சேர்வோம், நன்றியுடன் வாழ்வோம், நாதன்வழி நடப்போம். ‘அவர்கள் அவர்தம் கட்டளைகளை கடைப்பிடிக்கவும், அவர்தம் சட்டங் களின்படி ஒழுகவுமே அவர் இவ்வாறு செய்தார். அல்லேலூயா!’ (வச.45) இறைவன் தாமே தமது நிறைவான நன்மைகளால் நம்மை நிறைத்து வழிநடத்துவாராக.

சங்கீதங்கள் கற்றுத்தரும்விலையேறப்பெற்ற சத்தியங்கள். தொடரும்......



ஆசிரியர்: அருட்திரு. அறிவர். டி. சுரேஷ் ராஜன்,
தலைவர் (இந்திய மறை மாநாடு), குளோபல் மெத்தடிஸ்ட் திருச்சபை.

AUTHOR: REV. DR. D. SURESH RAJAN,
CONFERENCE SUPERINTENDENT, INDIA ANNUAL CONFERENCE, GLOBAL METHODIST CHURCH IN INDIA.