VasanaDhyian
EPISODE-166
February 2026
எஸ்தர் உபவாசம்
உயிர்களைக் காத்த உலர்-உபவாசம்

AUTHOR: REV.SJD Dharmaraja

மூன்றுநாள் அல்லும் பகலும், எனக்காக உபவாசம்பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம் பண்ணுவோம்; இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன். எஸ்தர்-4:16பி

எஸ்தர் ராணியின் வாழ்வில் நிகழ்ந்த இந்த சம்பவம், மக்களினம் அழிவை எதிர்கொள்ளும் சூழ்நிலைகளில், ‘கூட்டு உபவாசம்’ மற்றும் பிரார்த்தனை துணிவைத் தரும் என்பதை எடுத்துக் காட்டுகிறது. ‘சம்மன்’ இல்லாமல் ராஜாவை அணுகிவதற்காக மரண தண்டனை உண்டு என்ற அபாயத்தை எதிர்கொண்ட எஸ்தர், மூன்று நாள் உபவாச ஜெபத்தை அறிவித்தார். சூசாவில் உள்ள அனைத்து யூதர்களும் தன்னுடன் உபவாசத்தில் சேருமாறு கேட்டுக்கொண்டார். பயந்து நடுங்கிய நிலையிலிருந்து, ‘நான் செத்தாலும் சாகிறேன்’ (எஸ்.4:16) என துணிந்து சொல்லும் ‘நெருப்புள்ள விசுவாசத்திற்கு’ மாறினார்.

எஸ்தர் ராணியின் துணிச்சலான செயலின் 4-முக்கிய அம்சங்கள்:
கூட்டு வலிமை: எஸ்தர் ராணி, மொர்தெகாய் மற்றும் சூசாவிலிருந்த அனைத்து யூதர்களையும் 3-நாட்கள், இரவும் பகலும் தனக்காக உபவாசம் இருக்க அறிவுறுத் தினார். ஒரு நெருக்கடியான காலகட்டத்தில், கூட்டு உபவாச ஜெபம், ஒரு நபரை எப்படி பலப்படுத்துகிறது என்பதை இது விளக்குகிறது.

உலர் உபவாசம்: எஸ்தர்-4:16ல் குறிப்பிடப்பட்டுள்ள இந்த உபவாசம், உணவும் தண்ணீரும் இல்லாத 3-நாள் உபவாசம் ஆகும்;. ‘எஸ்தர்-உபவாசம்’ எனப்படும். இந்த உபவாசம் ‘உலர்-உபவாசம்’ என மறுபெயரிட்டு அழைக்கப்படுகிறது.

தேவ-தயவு: யூத மக்களை அழிக்க நினைத்த ஆமானின் பொல்லாத சதியை முறியடிப்பதில், கடவுளின் தயவைப் பெறுவதே இந்த உபவாசத்தின் நோக்கம்.

கிரியைசெய்த விசுவாசம்: இந்த உபவாசம் செயலற்றதாக இருக்கவில்லை. ராஜாவை அணுகி, ஆமானின் சதித்திட்டத்தை வெளிப்படுத்தி, தன் மக்களைக் காப்பாற்றும் துணிவுள்ள நல்ல நடவடிக்கையை எடுக்க எஸ்தருக்கு உதவியது.

எஸ்தர்-4:14ல் காணப்படும் ‘இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாய் இருக்கும்படி’ என்ற சொற் றொடர், ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தகுதியை கடவுள் நமக்கு அளித்துள்ளார் என்பதைப் புரிந்துகொண்டு செயல்பட நம்மை நினைவூட்டுகிறது. மனித சக்தியைவிட தெய்வ சக்தியை நம்புவதற்கும், பயத்தை துணிச்சலாய் மாற்றுவதற்கும் எடுத்துக்காட்டான இந்நிகழ்ச்சி யிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்வோம்.


அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா, ஊழிய இயக்குநர்
இரட்சிப்பு ஊழியங்கள், சென்னை-93, தென்னிந்தியா