Salomi
EPISODE-43
February 2026
இந்திய கிறிஸ்தவ திருச்சபை சரிதை: (1முதல் 21ம் நூற்றாண்டுவரை) தொகுதி-9 பகுதி-2(2)
9. இந்திய கிறிஸ்தவம் - 17ம் நூற்றாண்டு:
2. (2) பிரான்ஸ் - பிற ஐரோப்பியர் வருகை:

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட ஆரம்பகால ஐரோப்பியர் களில் பிரெஞ்சுக்காரர்களும் இருந்தார்கள். போர்ச்சுகல், இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து ஏற்கனவே கிறிஸ்த பரப்பு களத்தில் இருப்பதால், கத்தோலிக்க பின்னணியுடைய பிரான்ஸ், பல்வேறு பதட்டங்களை யும் மதக்கொள்கை தொடர்பான அரசியல் சூழ்ச்சிகளையும் சந்தித்தது. ஹுஜினோட்கள்: (HUGUENOTS) என்பவர்கள் 16 மற்றும் 17ஆம் நூற்றாண்டுகளில் பிரான்ஸைச் சேர்ந்த புராட்டஸ்டன்ட் சீர்திருத்த கிறிஸ்தவர்கள்; குறிப்பாக, ஜான் கால்வினின் போதனை களைப் பின்பற்றியவர்கள். இவர்கள் பிரான்ஸில் துன்புறுத்தப்பட்டனர்; இதனால், பலர் நாட்டை விட்டு வெளியேறி இங்கிலாந்து, ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளில் தஞ்சம் புகுந்தனர், இது பிரான்ஸில் மத போர்களுக்கு வழிவகுத்தது. கி.பி.1598ல் பிரான்ஸ் மன்னர் 4ம் ஹென்றி ‘நான்டெஸ் ஆணை’யை வெளியிட்டார். ‘நான்டெஸ் ஆணை’ (EDICT OF NANTES) என்பது புராட்டஸ் டன்ட்களுக்கு மத சுதந்திரம் மற்றும் சிவில் உரிமைகளை வழங்கி, கத்தோலிக்கர்கள் மற்றும் புராட்டஸ்டன்ட்ஸ் (ஹுஜினோட்) இடையே நடந்த நீண்ட மதப் போர்களை முடிவுக்குக் கொண்டுவரவும், பிரான்சில் அமைதி-ஒற்றுமையை; நிலைநாட்டவும் உதவியது.

டிரென்ட் கவுன்சில் (கி.பி.1545-1563):
இக்கவுண்சில், பிரான்ஸ் கத்தோலிக்க சீர்திருத்த இயக்கங் களைத் தூண்டியது. ஆன்மீக புதுப்பித்தல் மற்றும் பாரம்பரிய கத்தோலிக்க விழுமியங்களுக்குத் திரும்புவதை வலியுறுத்துவதன்மூலம் புராட்டஸ்டன்ட் சீர்திருத்தத்தின் செல்வாக்குகளை எதிர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன. கார்டினல் பியர் டி. பெருல் மற்றும் செயிண்ட் பிரான்சுவா டி. சேல்ஸ் போன்றோர் இந்த சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் சென்றனர்; புதிய மத ஒழுங்குகளை நிறுவினர் மற்றும் கத்தோலிக்க மதத்தின் பக்தியுள்ள வடிவத்தை ஊக்குவித்தனர். இந்நிலையில் கத்தோலிக்க திருச்சபைக்குள் தோன்றிய புராட்டஸ்டன்ட் பிரிவுகளில் பெரும்பாலானவை ஓரங்கட்டப்பட்டு தடைசெய்யப்பட்டன.

பிரான்ஸ் ஆதிக்கம்:
17ம் நூற்றாண்டில், பிரெஞ்சு கத்தோலிக்கம் கிறிஸ்தவத்தில் ஆதிக்க மானது; இந்தக் காலகட்டத்தில் ஜேசுயிட்டுகள் இந்தியாவில் மிஷன்களை நிறுவி மிஷனரிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். பிரான்ஸ் மன்னராட்சி ரோமன் கத்தோலிக்க போப் ஆட்சியுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருந்தது. 14ம் லூயி போன்ற ஆட்சியாளர்கள் திருச்சபை மற்றும் அதன் நியமனங்கள் மீது கட்டுப்பாட்டை வலியுறுத்தினர். 14ம் லூயி, தனது அதிகாரத்தை பலப்படுத்த காலினியிசத்தைப் பயன்படுத்தினார்; இது போப்புடன் மோதலையும் திருச்சபை விவகாரங்கில் ஆதிக்கத்தையும் ஏற்படுத்தியது.

ஹுஜினோட்களுக்கு எதிரான போக்கைக் கொண்டிருந்த மன்னர் 14ம் லூயி, ‘நான்டெஸின் ஆணை’யை புறக்கணிக்கத் தொடங்கினார். ஹுஜினோட்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் சுதந்தி ரங்கள் பதற்றத்திற்கும் மோதலுக்கும் ஆதாரமாக மாறியது. கி.பி.1685ல் மன்னர் 14ம் லூயி, ‘நான்டெஸின் அரசாணை’யை ரத்து செய்தார். ஹிஜினோட்களின் வீடுகளில் பிரஞ்சு போர்வீரர் களை தங்கவைத்து அச்சுறுத்தும் ‘டிராகனேட்ஸ்’ கொள்கை செயல்படுத்தப்பட்டது. இது ஹிஜினோட்களின் துன்புறுத்தலுக்கும் பிரெஞ்சு குடியேற்றத்திற்கும் வழிவகுத்தது. புராட்டஸ் டன்ட் மக்கள்த்தொகை சரிந்தது; அது, மத நல்லிணக்கத்துக்கான உந்துதலை ஏற்படுத்தியது.

கடவுளின் முழுமையான இறையாண்மையையும் மனிதகுலத்தின் சீரழிவையும் வலியுறுத்தி, ‘ஜான்சனிசம்’ என்று அழைக்கப்படும் ஒரு இறையியல் இயக்கம் தோன்றியது. ‘ஜான்சனிசம்’ கத்தோலிக்க திருச்சபைக்குள் தீவிரமான இறையியல் விவாதங்களையும் அருள் மற்றும் சுதந்திரம் குறித்த சர்ச்சைகளையும் தூண்டியது, இந்த இயக்கம் 17 மற்றும் 18ம் நூற்றாண்டுகள் முழுதும் தொடர்ந்தது, இதனால் பிரெஞ்சு கத்தோலிக்க திருச்சபைக்குள் பிளவுகள் ஏற்பட்டன. 17ம் நூற்றாண்டில் இந்தியாவில், குறிப்பாக பாண்டிச்சேரியில் பிரெஞ்சு காலனித்துவ முயற்சி கள் மற்றும் இராணுவ வெற்றி மூலம் திருச்சபை விரிவாக்கம் ஏதும் நிகழவில்லை.

பிற நாடுகள் (டென்மார்க்): பிற ஐரோப்பிய சக்திகளுடன் ஒப்பிடும்போது டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனி சிறியதாய் இருந்தாலும், டென்மார்க்கின் மன்னர் 4ம் ஃபிரடெரிக் (லூத்தரன்) மிஷனரி பணியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவர், கி.பி.1706ல் ஜீகன்பால்க் மற்றும் ப்ளுட்சாவை இந்தியாவுக்கு அனுப்பி, டிரான்குபாரில் டேனிஷ் மிஷனை நிறுவினார். டிரான்குபாரில், டேனிஷ் அதிகாரிகள் மற்றும் இந்திய மக்களின் எதிர்ப்புகளை டேனிஷ் மிஷனரிகள், சந்தித்தனர்; ஜீகன் பால்க் மற்றும் ப்ளுட்சாவ், உள்ளுர் மொழிகளை கற்றுக்கொண்டு பைபிள் உள்ளிட்ட மதநூல் களை மொழிபெயர்ப்பதில் தீவிர கவனம் செலுத்தினர்.

டிரான்க்யூபார் மிஷன், இந்தியாவில் புராட்டஸ்டன்ட் மதமாற்றங்களுக்கு மட்டுமின்றி, பள்ளிகள் அச்சகங்கள் போன்றவற்றை நிறுவுவதற்கும் வழிவகுத்தது. இந்த பணித்தள நிறுவனங்கள் லூத்தரனிசம் பரவுவதற்கு அடித்தளமிட்டதோடு, பூர்வீக இந்திய லூத்தரன் சமூகத்தின் வளர்ச் சிக்கும் பங்களித்தன. கி.பி.1653ல் ஒடுக்குமுறை மற்றும் லத்தீன் மயமாக்கலை எதிர்கொண்ட செயிண்ட் தாமஸ் கிறிஸ்தவ சமூகம், மட்டஞ்சேரியில், கூனன் சிலுவையில் கூடி, ரோமன் கத்தோலிக்க மற்றும் போர்த்துகீசிய ஆதிக்கத்தை எதிர்ப்பதாக உறுதிமொழி (கூனன் சிலுவை உறுதிமொழி) எடுத்துக்கொண்டது. தாமஸ் கிறிஸ்தவம் பிளவுபட்டது. ‘பழையகூர்’ பிரிவினர், கத்தோலிக்க திருச்சபையுடன் இணைந்து கிழக்கு-சிரியாக் வழிபாட்டு மரபைப் பின்பற்றினர். அறிவொளி இயக்கம், பகுத்தறிவு மற்றும் தனிநபர் சுதந்திரத்தின் மீது காட்டும் முக்கியத்துவம் ஆகியவை திருச்சபையின் அதிகாரத்தை மேலும் சவால் நிறைந்ததாக்கும் என்பது உண்மை.

இந்திய கிறிஸ்தவ திருச்சபை வரலாறு தொடரும்...
Author: Dr. Mrs. Salomi Manohar
Asst. Professor Rtd., (Pope’s College, Sawyerpuram) Thiruvanmiyur, Chennai. South India