AUTHOR: REV.DR. D.SURESH RAJAN
சங்கீதம் - 93ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள். இந்த சங்கீதம் கடவுளுடைய இறையாண்மையையும் மகத்துவத்தையும் சொல்லும் பாடலாக அமைந் துள்ளது. இது கர்த்தருடைய நித்திய ஆட்சியையும், நம் வாழ்க்கைக்கு அவர் கொண்டுவரும் நிலைத்தன்மையையும், அவருடைய வல்லமையின் பெருக்கத்தையும், நம் வாழ்விற்கு அவர் வரையறுத்துள்ள ஒழுக்க நெறிமுறைகளையும் நமக்கு நினைப்பூட்டும் பாடலாகவும் உள்ளது.
1. ஆண்டவரின் ஆட்சி: (வச 1)
“ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்: அவர் மாட்சியை ஆடையாய் அணிந்திருக்கிறார்” என்ற ஒரு அறிவிப்புடன் இந்த சங்கீதம் தொடங்குகிறது. இந்த சொற்றொடர் இறைவன் வெறும் ஆட்சியாளர் மட்டுமல்ல, தமது அனைத்து சிருஷ்டிப்பின் மீதும் முடிவான அதிகாரம் உள்ளவர் என்பதை வலியுறுத்துகிறது. இது அவருடைய குணாதிசயத்தையும் அதிகாரத்தையும் பிரதிபலிக்கிறது.
நம் வாழ்க்கையில், நாம் அடிக்கடி குழப்பத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் சந்திக்கிறோம்; எனினும், இறைவன் ஒவ்வொரு சூழ்நிலையிலும் நமக்கு போதுமானவராக இருந்து நம்மை ஆளுகை செய்து வழிநடத்துகிறார் என்பதை நாம் நினைவில் கொள்ள அழைக்கப்படுகிறோம். அவருடைய அதிகாரம் கணக்கில் அடங்காதது. ஆகவே, நாம் வாழ்வின் விளிம்பில் வேதனையோடு வாழ்ந்துகொண்டிருந்தாலும் ஆண்டவர் நம் வாழ்வை அவரது முழு கட்டுப்பாட்டுக் குள்ளாக வைத்துள்ளார் என்ற நம்பிக்கையுடன் நாம் வாழமுடியும்.
2. ஆண்டவரின் நிலைத்தன்மை: (வச 2)
“உமது அரியணை தொடக்கத்திலிருந்தே நிலைபெற்றள்ளது: நீர் தொன்று தொட்டே நிலைத்துள்ளீர்.” என்ற வரிகள் இறைவனுடைய ஆட்சியின் நித்திய தன்மையை வெளிப்படுத்துகிறது. எழுச்சியும், வீழ்ச்சியும் அடையும் பூலோக அரசாங்கங்களைப் போல் அல்லாமல், இறைவனுடைய ஆட்சி என்றென்றும் நித்தியகாலமாய் நிலைத்திருக்கிறது. நமது கடவுள் ‘காலங்களைக் கடந்தவர்’ அல்லது ‘காலத்திற்கு அப்பாற்பட்டவர்’ என்பதை புரிந்துகொண்டு நாம் அவரது நிலைத்தன்மையை நம்பவேண்டும். மட்டுமல்ல, கடவுளுடைய திட்டங்களும் நோக்கங் களும் நமது புரிதலுக்கு அப்பாற்பட்டவை எனவே, துன்ப நேரங்களில், நாம் அவர் மீதுள்ள நமது பற்றுறுதியை அவருடைய நித்திய வாக்குத்தத்தங்களில் நங்கூரமிட்டு அவரை இறுகப் பிடித்துக்கொள்ள வேண்டும்.
3. ஆண்டவரின் வல்லமை: (வசனங்கள் 3, 4)
இந்த சங்கீதம் கொந்தளிக்கும் நீர்நிலைகளின் தன்மையை விவரிக்கும் விதமாக, “ஆண்டவரே! ஆறுகள் குதித்தெழுந்தன: ஆறுகள் இரைச்சலிட்டன: ஆறுகள் ஆரவாரம் செய்தன.” (வச-3) என குறிப்பிடுகிறது. இங்கே, கொந்தளிக்கும் நீரின் படிமம் நம் வாழ்வில் ஏற்படும் குழப்பத்தையும் கலக்கத்தையும் குறிக்கிறது. ‘சுனாமி’ பேரலைகள் சீறியெழும்பி அடித்ததால் கடலோரமாய் வாழ்ந்த நம் மக்கள் பட்ட எண்ணற்ற துயரங்கள் நம் நினைவிறக்கு வருகிறது. நமது வாழ்வில் இன்றும் சுனாமி போன்ற பல பிரச்சனைகள் நம்மை அச்சுறுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், “பெருவெள்ளத்தின் இரைச்சலையும் கடலின் ஆற்றல்மிகு பேரலைகளையும் விட ஆண்டவர் வலிமை மிக்கவர்: அவரே உன்னதத்தில் உயர்ந்தவர்.” (வச-4) என்ற வாக்கியங்கள் ஆறுதலளித்து புது நம்பிக்கையை நமக்கு அளிக்கின்றன. இறைவன் நீர்நிலைகளின் மீது அதிகாரம் கொண்டிருப்பது போல, நம் வாழ்வின் அலசல்களின் மீதும் கட்டுப்பாடு கொண்டிருக்கிறார். அதிகப்படியான சவால்களை நாம் எதிர்கொள்ளும்போது, இறைவனுடைய வல்லமை எல்லா எதிர்ப்புகளையும் தாண்டி நம்மை பாதுகாக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
4. ஆண்டவரின் ஒழுங்குமுறை: (வச 5)
இறுதியாக, இந்த சங்கீதம் இறைவனுடைய சட்டங்களைக் குறித்ததான ஒரு பிரகடனத்துடன் நிறைவடைகிறது. “உம்முடைய ஒழுங்கு முறைகள் மிகவும் உறுதியானவை; ஆண்டவரே! என்றென்றும் தூய்மையே உமது இல்லத்தை அழகு செய்யும்.” என்பதே அந்த பிரகடனத்தின் வாசகங்கள். இது இறைவனுடைய வார்த்தையின் நம்பகத்தன்மையையும் அவருடைய தூய்மை யையும் குறிக்கிறது. நிச்சயமற்ற தன்மை நிறைந்த இவ்வுலகில், திருமறையில் காணப்படும் வாக்குத் தத்தங்களை நாம் நம்பலாம்
இறைவனுடைய வார்த்தைகள் வழிகாட்டுதலையும் உறுதிப்பாட்டையும் நமக்கு அளிக்கின்றன; அவை, அவருடைய தூய்மையான குணாதிசயத்தையும் அவரது உண்மையுள்ள தன்மையையும் நமக்கு நினைவூட்டுபவையாய் இருக்கின்றன.
முடிவுரை:
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே! இந்த சங்கீதத்தை நாம் தியானிக்கும்போது, நம்முடைய வாழ்வில் நாம் கடவுளுடைய ஆட்சியை அங்கீகரித்து, நம் கவலைகளையெல்லாம் அவரிடம் ஒப்படைத்துவிடவேண்டும் என்பதை உணர்ந்து கொள்கிறோம். நம் சூழ்நிலைகள் எவ்வளவு கடுமையாக கொந்தளிக்கும் நிலையில் இருந்தாலும், இறைவன் எப்போதும் நம் சூழ்நிலைகள் மேல் முழு கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்பதை புரிந்து உணர்ந்தவர்களாய் கடவுளின் கரங்களை இறுக பற்றிக்கொள்வோம். அவருடைய வல்லமையை நம்புவதற்குத் தேவையான பலத்திற்காக வும், அவருடைய பரிசுத்த வழிமுறைகளின்படி வாழ்வதற்கான ஞானவரங்களுக்காகவும் இறை வேண்டல் செய்வோம். கர்த்தர் தாமே உங்கள் அனைவரையும் ஆசீர்;வதிப்பாராக. ஆமென்.
சங்கீதங்கள் கற்றுத்தரும்விலையேறப்பெற்ற சத்தியங்கள். தொடரும்......
ஆசிரியர்: அருட்திரு. அறிவர். டி. சுரேஷ் ராஜன்,
இணை நிறுவனர், வேதாகம மொழிபெயர்ப்பு முயற்சிகள், கோயம்புத்தூர். தென்னிந்தியா.