AUTHOR: REV.DR. D.SURESH RAJAN
சங்கீதம் - 111முன்னுரை:
ஒரு ஞாயிறு பள்ளியில் ஆசிரியர் ஒரு சிறுவனிடம் கேட்டார்: நன்றியுணர்வு என்றால் என்ன? என்று. அதற்கு அந்தச் சிறுவன், கடவுள் செய்த நன்மைகளை, பின்னாட்களிலும் மறக்காமல் நினைவில் வைத்திருப்பதே நன்றியுணர்வு. என அழகாகப் பதிலளித்தான். அதுவே இந்த சங்கீதத்தின் மையச் செய்தி. நாம் கடவுள் செய்த நன்மைகள், அவர் தந்த பாதுகாப்பு, அவர் அளித்த மன்னிப்பு, சிலுவையில் நமக்காக அவர் செய்த மீட்பு ஆகியவற்றை மறந்துவிடுகிறோம். இந்த சங்கீதம் ஒரு நினைவுகூரும் சங்கீதம். இது நாம் கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கவும், ஆண்டவரைத் துதிக்கவும் நம்மை அழைக்கிறது.
1. ஆண்டவரைத் துதியுங்கள் (வசனங்கள் 1-3)
“அல்லேலூயா! நேர்மையாளரின் சபையிலும், திரளிலும் முழு உள்ளத்தோடு ஆண்டவருக்கு நன்றி கூறுவேன்" (வச-1).
சங்கீதக்காரர், “எல்லாம் நன்றாக நடந்தால் நான் துதிப்பேன்| என்று கூறவில்லை. ‘முழு உள்ளத்தோடு துதிப்பேன்’ என்று கூறுகிறார். உண்மையான துதி சூழ்நிலையைப் பொறுத்ததல்ல, அது கடவுளின் மாறாத குணத்தைப் பொறுத்தது. தாவீது குகையில் இருந்த போதும் கடவுளைப் பாடினார். பவுலும் சீலாவும் சிறையில் இருந்தபோதும் இறைவனைத் துதித்தார்கள் (அப்.16:25). யோபு சகலத்தையும் இழந்தபோதும்,
“ஆண்டவருடைய பெயர் போற்றப்படுவதாக!” (யோபு.1:21) என்றார். ஆபகூக், “அத்திமரம் தளிர்க்காவிட்டாலும்... நான் ஆண்டவரில் மகிழ்வேன். (ஆப.3:17,18) என்றார்.
பெருங்ககாற்றில் சிக்கிய இரண்டு பறவைகளில் ஒன்று மகிழ்ச்சியுடன் பாடியதாம், உடனே மற்ற பறவை, ‘புயல் வரப்போகிறது. ஏன் பாடுகிறாய்?’ என்று கேட்டதாம். அதற்கு முதல் பறவை, “இந்தப் புயலை உண்டாக்கியவரை நான் அறிவேன் ஆகவே, எனக்குப் பயமில்லை” என்று கூறியதாம். இவ்வாறு, இறைவன் மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையுடையவர்களாக நாம் வாழவேண்டும்.
“ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை; அவற்றில் இன்பம் காண்போர் அவற்றை ஆய்ந்துணர்வர்” (வச.2).
இங்கு, ‘ஆய்ந்துணர்வர்’ என்ற சொல், கடவுளின் செயல்களை ஆழமாகச் சிந்திக்கத் தூண்டுகிறது. நாமும் முன்நாட்களை மறக்காமல் ஆய்ந்துணர்ந்து கடவுளைத் துதிக்கவேண்டும்.
2. ஆண்டவரது உடன்படிக்கை: (வசனங்கள் 4-6)
“தம் வியத்தகு செயல்களை என்றும் நினைவில்நிலைக்கச் செய்துள்ளார்” (வச.4).
கடவுள் பாஸ்கா, ஓய்வுநாள், யூபிலி போன்றவற்றை நமக்கு ஏற்படுத்தியுள்ளார். இயேசு திருமுழுக்கு மற்றும் திருவிருந்தை ஏற்படுத்தி, “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” (லூக்.22:19) என்று கூறிச்சென்றிருக்கிறார். “அருளும் இரக்கமும் உடையவர் ஆண்டவர்” (வச.4). இது யாத்.34:6ல் கடவுள் தம்மைப் பற்றி சொன்ன வார்த்தைகளை நினைவூட்டுகிறது. இஸ்ரயேல் மக்கள் மென்மேலும் தவறு செய்தபோதிலும், கடவுள் தம் உடன்படிக்கைக்கு உண்மை யாய் இருந்தார். இதையே, பவுல்:
“நாம் உண்மையற்றவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராகவே இருக்கிறார்” (2தீமோ.2:13)
என்று குறிப்பிடுகிறார். இஸ்ரயேல் மக்களுக்கு மன்னாவை கொடுத்த (வச.5) கடவுள்; எலியாவை காக்கைகள் மூலம் பசியாற்றிய கடவுள்; 5000 பேருக்கு உணவளித்த ஆண்டவர் இயேசு என இன்றும் இறைவன் நம் தேவைகளை நிறைவேற்ற வல்லவர்.
3. ஆண்டவரின் செயல்கள் நம்பிக்கைக்குரியவை: (வசனங்கள்7-9)
“அவர்தம் ஆற்றல்மிகு செயல்கள் நம்பிக்கைக்குரியவை” (வச.7). மனிதர்கள் வாக்குறுதியை மீறலாம்; ஆனால், ஆண்டவர் ஒருபோதும் தம் வார்த்தையை மீறமாட்டார் என்பதை பின்வரும் திருவசனங்களில் காண்கிறோம். “பொய்சொல்ல கடவுள் ஒரு மனிதன் அல்ல” (எண்.23:19). “புல் உலரும்; பூ வாடும்; நம் கடவுளின் சொல் என்றென்றும் நிலைத்திருக்கும்” (எசா.40:8). “வானமும் மண்ணும் ஒழிந்துபோம்; என் வார்த்தைகளோ ஒழிந்துபோகா” (மத்.24:35). “தம் மக்களுக்கு அவர் மீட்பு அளித்தார்” (வச.9). எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து இஸ்ரயேலர் பெற்ற விடுதலையை இது குறித்தாலும், முழுமையாக இயேசு கிறிஸ்துவில் இது நிறைவேறுகிறது. நம்மை கடவுள் படைத்தார் ஆனால் பாவம் நம்மை அவரிடமிருந்து பிரித்தது. இயேசுவோ, தம் இரத்தத்தால் நம்மை மீட்டு (1யோவா.1:7) கடவுள் நம்மீது அக்கறை உள்ளவர் என்பதை நிரூபித்தார்.
4.ஆண்டவருக்கு அஞ்சுதலே ஞானத்தின் தொடக்கம்: (வசனம்.10)
“ஆண்டவர் பற்றிய அச்சமே ஞானத்தின் தொடக்கம்” (வச.10, நீதி.1:7, நீதி.9:10). உலக அறிவு மனிதனை புத்திசாலியாக்கலாம்; ஆனால், கடவுளுக்கு அஞ்சும் மனம்தான் ஞானத்தை பெறுகிறது. சாலமோன் ஞானத்தைக் கேட்டார்; அதை கடவுள் அவருக்கு அளித்தார். ஆனால் கடவுளுக்கு அஞ்சும் மனதை அவர் இழந்தபோது அவர் ஆசீர்வாதத்தை இழந்தார். நாமும் கடவுளுக்குப் பயந்து அவர்வழி நடந்து அவத் தரும் ஞானத்தை பெற்றுக்கொள்வோமாக.
முடிவுரை: ஒரு சிறுமி தன் பாட்டியிடம் கேட்டாள்: “பாட்டி, ஆண்டவர் உங்களுக்கு உதவிய கதைகளை ஏன் மீண்டும் மீண்டும் சொல்கிறீர்கள்?” என்று. பாட்டி சிரித்தபடி கூறினார், “நானும் நீயும் மறந்துவிடக்கூடாது என்பதற்காக” என்று. அன்பர்களே! ஆண்டவரின் செய்கைகளை எப்பொழுதும் நினைவுகூருங்கள். சிலுவையில் மரித்து உயிர்த்து எழுந்த இயேசு கிறிஸ்துவின் அன்பை நினைவுகூருங்கள். அதனால் நமது விசுவாசம் பலப்படும், நமது நம்பிக்கை உறுதியாகும், நமது கீழ்ப்படிதல் மகிழ்ச்சியாகும். இச்சங்கீதம் ‘அல்லேலூயா!’ என்று தொடங்கி, ‘அவரது புகழ் என்றென்றும் நிலைத்துள்ளது’ என்று முடிகிறது. அப்படியே, நாமும் ஆண்டவரின் புகழுக்கு சாட்சியாய் வாழ்வோம். ஆமென்.
சங்கீதங்கள் கற்றுத்தரும்விலையேறப்பெற்ற சத்தியங்கள். தொடரும்......
ஆசிரியர்: அருட்திரு. அறிவர். டி. சுரேஷ் ராஜன்,
தலைவர் (இந்திய மறை மாநாடு), குளோபல் மெத்தடிஸ்ட் திருச்சபை.
AUTHOR: REV. DR. D. SURESH RAJAN,
CONFERENCE SUPERINTENDENT, INDIA ANNUAL CONFERENCE,
GLOBAL METHODIST CHURCH IN INDIA.