AUTHOR: REV.SJD Dharmaraja
கர்த்தர் உன் போக்கையும், உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்கும் காப்பார். சங்.121:8
சங்கீதம்-121, ‘பயணிகளின் சங்கீதம்’ என பெயரிட்டு அழைக்கப்படுகிறது (THE TRAVELERS’ PSALM). தொலைதூரப் பயணம் எப்போதும் ஒருவித ஆபத்தை எதிர்கொள்ளும் உணர்வை நமக்கு அளிக்கிறது. குறிப்பாக, நெடுஞ்சாலைகளில் நாடு முழுவதும் வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது இது இன்னும் அதிகம்.
விடுமுறைப் பயணங்கள், தொழில்முறைப் பயணங்கள், போர்காலப் பயணங்கள், மிஷனரி பயணங்கள் போன்ற நீண்டதூரப் பயணங்களில் புதிய இடங்களுக்குச் செல்லும்போது, ஆறுதல் தரும் பாடலாக சங்கீதம்-121ஐ விசுவாச கூட்டத்தார் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நாமும் இந்நாட்களில் தரைவழி, கடல்வழி, வான்வழி மார்க்கங்களில் மலைகள், ஆறுகள், கடல்கள், மற்றும் மேகங்களைக் கடந்து பயணம் செய்யும் தருணங்களில் இந்த சங்கீதத்தை மீண்டும் மீண்டும் வாசித்து தியானிப்பது நமக்கு நம்பிக்கை மற்றும் தைரியத்தை அளிக்கும் என்பதில் ஐயமில்லை.
வாழ்க்கையே பெரும்பாலும் நமக்கு ஒரு சவாலான, ஆபத்தான பயணமாகத்தான் இருக்கிறது; நம் முன்னால் உள்ள குன்றுகளுக்கு அப்பால் என்ன இருக்கிறது என்பது பற்றிய தெளிவான புரிதல் நமக்கு இருப்பதில்லை. நாம் ‘மலைகளுக்கு நேராக நம் கண்களை ஏறெடுக்கிறோம்’ (வச.1), அந்தக் குன்றுகளைக் கடந்து செல்ல ‘கர்த்தரிடமிருந்தே உதவி வருகிறது’ (வச.2) என்பதை உணர்ந்து கொள்வது, கிறிஸ்துவைப் பின்பற்றும் நமக்கு நம்பிக்கையை அளிக்கும்.
கடவுள் நம் கால்களை இடற விடமாட்டார், நம் மீது கண்களை வைத்திருக்கும் அவர் உறங்கமாட்டார். பகலிலும் இரவிலும் அவர் நம்முடனிருந்து சேதங்கள் அணுகாமல் நம்மைப் பாதுகாக்கிறார்; எனவே, நாம் நிம்மதியாக இருக்கலாம். ‘கர்த்தர் உங்களை எல்லாத் தீமைகளிலிருந்தும் காப்பார்.’ (வச.7) ‘கர்த்தர் உங்கள் போக்கையும் வரத்தையும் இதுமுதல் என்றென்றும் காப்பார்.’ (வச.8). ஆகிய வசனங்கள், நமக்கு மிகுந்த ஆறுதலைத் தருவதாகும். நாம் எங்கு சென்றாலும், கடவுள் நம்மைக் கவனித்துக்கொண்டு இருக்கிறார், என்ற உண்மையை இச்சங்கீதம் எடுத்துரைக்கிறது. நாம்; பயணம் செய்யும்போதும், வாழ்வின் மலைபோன்ற சவால் களை எதிர்கொள்ளும்போதும், பயமின்றி முன்னேறிச் செல்வதற்கான நம்பிக்கை மற்றும் தைரியத்தை இச்சங்கீதத்தில் பெறுவோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா, ஊழிய இயக்குநர்
]
இரட்சிப்பு ஊழியங்கள், சென்னை-93, தென்னிந்தியா