Azariah Gnanadoss
கதை எண்: 183
August 2026

பேராசை பிறந்தது! பிரியா நட்பு பிரிந்தது!

சகோ. எம். அசரியா ஞானதாஸ் எம்.ஏ; எம்.எட்


இங்கிலாந்து தேசத்தில் JONE, JANIE என்னும் இணைபிரியா நண்பர்கள் தங்கள் குடும்பங்களோடு, அண்டைவீடுகளில் வசித்துவந்தனர். அவர்கள் பண்ணை விவசாயம் செய்து பணக்காரர்களாய் இருந்தனர். ஒரு நாள், இருவரும் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, வீடு கட்டுவதற்காக ஆற்றுமணல் குவித்து வைக்கப் பட்டிருந்ததை கண்டனர். அதை கண்டதும் இருவரும், “இந்த ஆற்றுமணலின்மீது அமர்ந்து பேசியபடி ஓர் இரவு நேரத்தைக் கழிக்கவேண்டும்” என விருப்பம் தெரிவித்தனர். அதன்படி வானத்தில் முழுநிலவு தோன்றிய ஒரு மாலை நேரத்தில் நண்பர்கள் இருவரும் அந்த மணறகுவியல்மீது சுகமாக படுத்துக் கொண்டு வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

விண்ணில் முழுநிலவைக் கண்ட JONE, “இந்த நிலா, பரப்பளவில் எவ்வளவு பெரிதாக இருக்குமோ? அவ்வளவு பெரிய புல்வெளி எனக்கு வேண்டும்” என்றான்.

இதைக் கேட்ட JANIE, “ஆஹா! வானில் எவ்வளவு நட்சத்திரங்கள் உள்ளன? அதேபோல் ஏராளமான ஆடுகள் எனக்கு வேண்டும்” என்றான்.

இதைக்கேட்டு அதிர்ந்த JONE, “அவ்வளவு ஆடுகளையும் எங்கு மேய்ப்பாய்?” என கேட்டான்?

இதைக்கேட்ட JANIE, “உன்னிடம்தான் நிலாவைப்போல் பரந்த புல்வெளி இருக்கிறதே! அவ்வளவும் என் ஆடுகளுக்குத்தான்” என பதிலளித்தான்.

உடனே JONE, “என் புல்வெளி என் ஆடுகளுக்குதான்; உன் ஆடுகளுக்கு இல்லை” என கத்தினான்.

இதைக்கேட்ட JANIE, கோபம் தலைக்கு ஏறியவனாய், “எனக்கு பயன்படாத புல்வெளி உனக்கு கிடைக்கக் கூடாது” என கூச்சலிட்டு JONEமீது பாய்ந்தான். பதிலுக்கு JONE, JANIEஐ அடித்து கீழே தள்ளினான்.

இவ்வாறு, இணைபிரியா நண்பர்கள் ஒருவரை ஒருவர் அடித்து காயப்படுத்திக்கொண்டு கோபத்தில்; கூச்சலிட்டவாறே தங்கள் நட்பை மறந்து பிரிந்து சென்றுவிட்டனர்.

பிரியமானவர்களே! நாம் JONE, JANIEஐ போல பேராசைக்கு இடம் கொடுக்கக்கூடாது. சிற்றின்பம் மற்றும் பேராசை, குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும். போதும் என்ற மனதுடன் கூடிய தெய்வ பக்தியுடன், தேவனுடைய ராஜ்யத்தையும் அதன் நீதியையும் தேடுவோம்; ஆசீர்வாதம் பெற்று மகிழ்வுடன் வாழ்வோம். வேதம் இவ்வாறு கூறுகிறது:

பண ஆசை எல்லா தீமைக்கும் வேராயிருக்கிறது. 1தீமோ-6:10
பொருளாசையை குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.லூக்-12:15
இருதயம் பொருளாசையை சாரக்கூடாது. சங்-119:36
பண ஆசையில்லாதவர்களாய் உங்களுக்கு இருக்கிறது போதுமென்று எண்ணுங்கள். எபி-13:5



M.AZARIAH GNANADOSS M.A; M.ED
EDITOR, RATCHIPPU TAMIL CHRISTIAN MONTHLY, SALIGRAMAM, CHENNAI-93. MOBILE:9962924900