AUTHOR: REV.DR. D.SURESH RAJAN
சங்கீதம் - 99அறிமுகம்:
இந்த பாடல், கடவுள் அரசாக இருப்பதை விளக்கும் ஒரு அரசாட்சி சங்கீதம். ஒரு தொழுகையின் கீதமும் ஆகும். இது கடவுளின் தூய்மை, மகிமை மற்றும் நீதியைப் பற்றி பேசுகிறது. இது ராஜாவாகிய கடவுளைப் புகழ்ந்து, அவருடைய ஆட்சியின் மகத்துவத்தை வெளிப்படுத்துகிறது ‘அவர் பரிசுத்தர்’ என்ற வார்த்தையை மூன்று முறை உரக்கக் கூறுகிறது (வசனங்கள் 3, 5, 9). கடவுள் முழுமையாக நீதியும், பரிசுத்தமும் நிறைந்த அரசாக இருக்கிறார் என்பதை வலி யுறுத்துவதாக இது அமைந்துள்ளது.
1. மகத்துவமுள்ள அரசர்: (வசனங்கள் 1-3)
“ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்: மக்களினத்தார் கலங்குவராக! அவர் கெருபுகள்மீது வீற்றிருக்கின்றார்: மண்ணுலகம் நடுநடுங்குவதாக! சீயோனில் ஆண்டவர் மேன்மையுடன் விளங்குகின்றார்: எல்லா இனத்தார் முன்பும் மாட்சியுடன் திகழ்கின்றார். மேன்மையானதும் அஞ்சுதற்கு உரியதுமான அவரது பெயரை அவர்கள் போற்றுவார்களாக! அவரே தூயவர்.”
இந்த பகுதி முக்கியமான ஒரு உண்மையைக் கூறுகிறது. ‘கடவுள் அரசாக இருக்கிறார்’. இந்தக் கடவுள், உலகத்தின் பூகோள - கலாச்சார அல்லது வேறு எந்த எல்லைக்கும் உட்பட்டவாராய் இராமல், பரிசுத்த அதிகாரத்துடனும், மேன்மையுடனும் இருக்கிறார். அவர் கெருபுகள் மேல் வீற்றிருக்கிறார் - இவை தேவ பிரசன்னத்தைக் குறிக்கும் திருவுடல் தூதர்கள் (யாத்.25:18-22).
“ஆண்டவரது உடன்படிக்கைப் பேழை பாளையத்திற்குள் வந்ததும், இஸ்ரயேல் அனைவரும் நிலமே அதிரும் அளவிற்குப் பெரும் ஆரவாரம் செய்தனர்.” (1 சாமுவேல் 4:5). நாம் உண்மையிலே ஆண்டவரை அரசாக காணும் பொழுது, அது நம்மை அதிரவைக்கும். ஆகவே இறைவனை நாம் பயத்தோடும் பக்தியோடும் தொழுது கொள்ள வேண்டும். இந்நாட்களில் இறை பயமற்ற தொழுகைகள் வியாபார நோக்கில் அரங்கேற்றப்படுவதை பார்க்க முடிகிறது. நமது ஆவி சிந்தை உடல் அனைத்தும் இறைவனுடைய அருட்பிரசன்னத்தை உணர்ந்து அவருக்கு முன் நடுக்கத்தோடு அவரை வழிபடவேண்டும். .
2. நீதியுள்ள அரசர்: (வசனங்கள் 4 - 5)
“வல்லமைமிக்க அரசரே! நீதியை நீர் விரும்புகின்றீர்: நேர்மையை நிலைக்கச் செய்கின்றீர்: யாக்கோபினரிடையே நீதியையும் நேர்மையையும் நீர்தாமே நிலைநாட்டுகின்றீர். நம் கடவுளாகிய ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்: தாள் பணிந்து வணங்குங்கள்: அவரே தூயவர்!” நேர்மையை, நீதியை காணாமல் பலர் வேதனையடைகின்றனர். ஆனால் ஆண்டவர் நீதியை விரும்புகின்றவர். அவர் நீதியை செய்கிறவர். ஆகவே அவரை வணங்கி, பெருமைப்படுத்துவோம்.
3. மன்னிக்கும் அரசர்: (வசனங்கள் 6 - 8)
“மோசேயும் ஆரோனும் அவர்தம் குருக்கள்: அவரது பெயரால் மன்றாடுவோருள் சாமுவேலும் ஒருவர்: அவர்கள் ஆண்டவரை நோக்கி மன்றாடினர்: அவரும் அவர்களுக்குச் செவிசாய்த்தார். மேகத் தூணிலிருந்து அவர்களோடு பேசினார்: அவர்கள் அவருடைய ஒழுங்கு முறைகளையும் அவர் அவர்களுக்குத் தந்த நியமங்களையும் கடைப்பிடித்தார்கள். எங்கள் கடவுளாகிய ஆண்டவரே! நீர் அவர்களுக்குச் செவிசாய்த்தீர்: மன்னிக்கும் கடவுளாக உம்மை வெளிப்படுத்தினீர்: ஆயினும், அவர்களுடைய தீச்செயல்களுக்காய் நீர் அவர்களைத் தண்டித்தீர்.”
மோசே, ஆரோன், சாமுவேல் ஆகிய மூவரும் தொழுகை செய்பவர்களாக கூறப்படுகிறார்கள். அவர்கள் வேண்டியபோது கடவுள் கேட்டார். அவர் மன்னிக்கும் கடவுள், அதே வேளையில், அவர் தவறு செய்பவர்களை நியாயமாகத் தண்டிப்பவரும் கூட.
மோசே இஸ்ராயேல் மக்களின் ‘தங்கக் காளை’ வழிபாட்டுக்குப் பிறகு, ஆண்டவரை வேண்டினார் (யாத்-32). கடவுள் அவர்களை மன்னித்தார், ஆனால் பாவத்தின் பின் விழைவுகள் இருந்தன. தாவீது அரசர் பாவத்தை ஒப்புக்கொண்டு அறிக்கை செய்தபொழுது கடவுள் அவரது பாவங்களை மணனித்தார். ஆனாலும் பாவத்தின் பின் விளைவை சந்திக்க நேர்ந்தது. அதேபோல், கடவுள் நமக்கு மன்னிப்பை அளிப்பவர், ஆனால் ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுக்கிறவர்.
முடிவுரை:
“நம்முடைய கடவுளாகிய ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்: அவரது திருமலையில் அவரைத் தொழுதுகொள்ளுங்கள். ஏனெனில், நம் கடவுளாகிய ஆண்டவரே தூயவர்.” (வசனம் 9).
இந்த சங்கீதம் மூன்றாவது முறையாக அவர் ‘தூயவர்| அதாவது ‘பரிசுத்தர்’ என்ற வார்த்தையோடு முடிகிறது. ஒரு தூய நிலையில் ஆண்டவருக்கு ஆராதனை செய்ய இங்கு நமக்கு அழைப்பு விடப்படுகிறது இச்சங்கீதம். நாம் இறைவனிடம் பரிசுத்த அச்சத்தோடு வருகிறோமா? தேவனின் பரிசுத்தம் நம்மை தூய்மை வாழ்வுக்கு மாத்திரமே அழைக்கிறது.
ரொமானியாவில் கம்யூனிச அரசாட்சி நடந்த நேரத்தில், சிலர் இரகசியமாக சந்தித்து மெல்லிய குரல்களில் சங்கீதங்களைப் பாடினார்கள். அவர்களால் எப்படி அந்த அபாயத்தில்கூட சந்தித்து பாடமுடிந்தது என்று கேட்டபோது, “தூயவரான கடவுளை ஆராதிக்காமல் இருக்க முடியாது.” என்று கூறினார்கள். தூய கடவுளை தூய உள்ளத்தோடு தொழுதுகொள்ளுவோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்...
சங்கீதங்கள் கற்றுத்தரும்விலையேறப்பெற்ற சத்தியங்கள். தொடரும்......
ஆசிரியர்: அருட்திரு. அறிவர். டி. சுரேஷ் ராஜன்,
இணை நிறுவனர், வேதாகம மொழிபெயர்ப்பு முயற்சிகள், கோயம்புத்தூர். தென்னிந்தியா.