AUTHOR: REV.SJD Dharmaraja
நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார். சங்-34:4
இம்மாதம் நம் நாட்டின் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறொம். நாம் விடுதலை பெற்றதாக சொல்லிக்கொள்கிறோம். ஆனாலும், பல்வேறு அரசியல் சூழ்நிலைகளில் பயந்துகொண்டே வாழ்கிறோம். நமது பயங்களை கடவுளிடம் விட்டுவிட்டு, தைரியத்தையும் அமைதியையும் அவரிடம் பெற்றுக்கொள்வோம் (சங். 34:1-7).
உலக வாழ்விலும், ஆவிக்குறிய வாழ்விலும் சோதனைக் காலங்களில், கவலை மற்றும் பயம் வந்து நம் இதயத்தை மூடும். ஆனல் இந்த வேதவசனம் நமக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக செயல்படுகிறது: “நான் கர்த்தரைத் தேடினேன், அவர் என் ஜெபத்தைக் கேட்டு, என்னுடைய எல்லா பயங்களில் இருந்தும் என்னை விடுவித்தார்" (வசனம்-4).
நாம் மிரட்டப்பட்டவர்களாகவும், பயமுறுத்தப்பட்டவர்களாகவம், ஒடுக்கப்பட்டவர்க ளாகவும், நிராகரிக்கப்பட்டவர்களாகவும், பாதிக்கப்பட்;டவர்களாகவம், தாக்கப்பட்ட வர்களாகவும் வாழும் இத்தருணங்களில், கடவுள் நமக்கு வழிகாட்டும் ஒளியைத் தர தயாராக இருக்கிறார். பயம் என்னும் இருளில் நடுவில் நம்மை அரவணைத்து வழிநடத்துகிறார். அவர் நம் பயங்களை நீக்கி நமக்கு மனமகிழ்ச்சியையும் முகமலர்சியையும் தருகிறார். “அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசம் அடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை.” என வசனம்-5ம் “கர்த்தர் நம் ஜெபம் கேட்டு நம் இடுக்கண்களிலிருந்து நம்மை விடுவிக்கிறார்.” என வசனம்-6ம் சொல்கின்றன.
நள்ளிரவிலும் வழிகாட்டும் கலங்கரை விளக்கத்தைப் போல, கடவுளின் பிரசன்னம் நம் வாழ்வின் இருண்ட பகுதிகளிலும் வழிகாட்டுகிறது. நாம் கடவுளைத் தேடும்போது, அவர் நமது புரிதலுக்கு அப்பாற்பட்ட அளவில் பதிலளிக்கிறார்.
பிரிய விசுவாசிகளே! கடவுள் தரும் விடுதலை என்பது, நமது சூழ்நிலைகளை மாற்றுவதல்ல; மாறாக, வாழ்வின் சவால்களை வெல்ல நமக்கு தைரியம் அளிப்பதாகும். நம் பயங்களின் நடுவில்கூட, கடவுள் நம்மோடிருக்கிறார், அவருடைய தெய்வீக ஒளி நம்மை வழி நடத்துகிறது, என்பதை அறிந்து ஆறுதல் பெறுவோம். இருண்ட தருணங்களில் நாம் அவரைத் தேடும்போது, அவரது ஒளி நம் பாதையை ஒளிரச்செய்கிறது என்பதை நிiவில் கொள்வோம்.. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா, ஊழிய இயக்குநர்
இரட்சிப்பு ஊழியங்கள், சென்னை-93, தென்னிந்தியா