Azariah Gnanadoss
கதை எண்: 171
August 2025

போதகரின் ஜெபத்தால் மனந்திரும்பிய பயங்கரவாதி

சகோ. எம். அசரியா ஞானதாஸ் எம்.ஏ; எம்.எட்


ஆப்பிரிக்கா தேசத்திலே Kette என்ற ஒரு வாலிபன், கல்லூரி படிப்பை முடித்த பின்னரும் வேலைக்கு செல்லாமல், நண்பர்களை சேர்த்துக் கொண்டு கொலை, கொள்ளை, குடி, வெறி, விபச்சாரம், வேசித்தனம் போன்ற வீணான செயல்களில் தனது வாழ்க்கையை கெடுத்துக் கொண்டிருந்தான். குறுகிய காலத்திலேயே கொடிய குற்றவாளியாக மாறிவிட்டான். அநேக பணக்காரர்கள், தங்கள் நகை, பணம், பொருட்களை Kette வந்து திருடிச் சென்றுவிடுவானோ, என்ற பயத்தில் தூக்கமின்றி இரவுகளைக் கழித்துக்கொண்டிருந்தனர். பெண்கள், பகல் நேரத்தில்கூட தெருக்களில் நடந்து செல்வதற்கு பயந்து நடுங்கினர். போலீஸ் அவனைக் கைது செய்ய பயந்து தயங்கியது. இதையெல்லாம் அறிந்த போதகர் ஒருவர், Kette மனந்திரும்பி இயேசுவை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக ஊக்கமாக ஜெபித்துக்கொண்டிருந்தார்.

ஒரு ஞாயிறு அன்று அந்த போதகர், காலை ஆராதனையை முடித்துவிட்டு Kette யின் வீட்டுக்குச் சென்றார். என்ன ஆச்சரியம்! சற்று நேரத்திலேயே, அவர் அவனது தோளில் தன் கைகளை போட்டபடி மக்கள் சந்தடி நிறைந்த ஒரு தெருவின் வழியாக அவனை ஆலயத்திற்கு அழைத்துச் சென்றார். இதைக்கண்ட மக்கள், மிகவும் வியந்து, ‘போதகர் அவனுடைய வாழ்வை மாற்றி விடுவார்’ என்ற நம்பிக்கையோடு தேவனுக்கு நன்றி செலுத்தினார்கள். அவர்களுடைய நம்பிக்கை வீண்போகவில்லை; Kette, அந்த போதகரின் ஆலோசனைக்கு செவிசாய்த்து, மனந்திரும்பி இயேசுவை ஏற்றுக்கொண்டு ஆயிரக்கணக்கான மக்களை இயேசுவண்டை வழிநடத்தும் கருவியாக மாறினான். இதைக்கண்ட அவ்வூர் மக்கள், தங்கள் வாழ்வின் அமைதிக்கு உதவிசெய்த போதகருக்கு நன்றி சொல்லி தேவனை துதித்தனர்.

பிரியமானவர்களே! நாமும் Kette யைப் போன்ற வாலிபர்களை காணும்போது, வெறுத்து ஒதுக்கிவிடாமல், அந்த போதகரைப்போல அவர்களுக்காக இடைவிடாமல் ஜெபம் செய்தால் இயேசு கிறிஸ்து நிச்சயமாக அதிசயங்களைச் செய்வார். சவுலை பவுலாக மாற்றிய தேவன், நம் வாலிபர்களையும் அருட்பணியாளர்களாக மாற்றுவார் என்ற நம்பிக்கையோடு நாமும் இடைவிடாமல் ஜெபித்து அற்புதங்களை காண்போம்.

வேதம் இவ்வாறு கூறுகிறது:

மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும்.லூக்-15:7
மனந்திரும்புங்கள் பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது. மத்-4:17
நீங்கள் மனந்திரும்பாமற்போனால் கெட்டுப்போவீர்கள். லூக்-13:3


M.AZARIAH GNANADOSS M.A; M.ED
EDITOR, RATCHIPPU TAMIL CHRISTIAN MONTHLY, SALIGRAMAM, CHENNAI-93. MOBILE:9962924900