Salomi
EPISODE-37
August 2025
இந்திய கிறிஸ்தவ திருச்சபை சரிதை: (1முதல் 21ம் நூற்றாண்டுவரை) தொகுதி-8 பகுதி-2
8. ஒளியும் நிழலும்
2. போர்த்துகீசிய அதிகாரிகளின் தலையீடு

போர்த்துகீசிய அதிகாரிகள், டயாம்பர் சினாட் மற்றும் கோவா விசாரணை போன்ற நடவடிக்கை கள் மூலம் கிறிஸ்தவத்தில் தலையிட்டனர். அவர்கள் செயிண்ட் தாமஸ் கிறிஸ்தவர்கள் மீது கட்டுப்பாடு விதிப்பதையும், ரோமன் கத்தோலிக்கத்துடன் மத இணக்கத்தை கடைபிடிப்பதையும் நோக்கமாகக் கொண்டிருந்தனர். இதில் வழிபாட்டு நடைமுறைகள், மொழி மற்றும் இந்த சமூகங்களின் தலைமையை மாற்றும் முயற்சிகளும் அடங்கும். போர்த்துகீசிய அதிகாரிகளின் தலையீடு குறித்து வரலாற்றுக் குறிப்புகளிலிருந்து, (நற்பெயர் பெற்ற போர்த்துகீசிய கவர்னர்கள் பற்றிய) ஒரு நவீன எழுத்தாளர் சேகரித்த சுவாரசிய தகவல்களில் சில:

  • · பிரான்சிஸ் பாரெட்டோ (கி.பி. 1555-58): இவர் ஒரு சிறந்த அரசவையாளர். நிறுவனங்கள் மற்றும் மன்னர்கள் இவரை அதிக அளவில் பயன்படுத்தினர்.

  • · கான்ஸ்டன்டைன் டி பிராகாங்கா (கி.பி. 1558-61): இவர் ஒரு நடுநிலை மனிதர், சாந்தமானவர், அன்பானவர், நீதியில் பிரியப்படுபவர், சிறந்த நண்பர், உண்மை உள்ளவர், தூய்மையானவர், ஊழலுக்குக் காரணம் கூறாமல் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்பவர்.

  • பிரான்சிஸ் டி குடின்ஹோ ரொடோண்டோவின் (கி.பி. 1561-64): இந்தியாவின் வைஸ்ராய், பதவிக்கு பொருத்தமான ஒரு நபர். தொலைநோக்குப் பார்வை, விவேகம் மற்றும் உறுதிப்பாடு போன்ற பல நற்குணங்களுடையவர்.

  • · ஆண்டனி டி நோரோன்ஹா (கி.பி. 1564-68): இவர் ஒரு அறிவாற்றலுடைய அரசவையாளர். இவருடைய திறமையையும் விவேகத்தையும் குடியிருப்பாளர்கள் அறிந்திருந்ததால் அவர்கள் இவரை மிகவும் விரும்பி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

16ம் நூற்றாண்டின் நடுப்பகுதி ‘கருணையின் கடுமை’ காலத்தில் நுழைகிறது. இது கிறிஸ்தவ இறையியலின் ‘நீதி’ மற்றும் ‘கருணை’ ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும், அவற்றை சமநிலைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியது. கிறிஸ்தவர்களாக மாற அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டது. ‘கொள்கை மாற்றங்கள்’ நிழல்கள் போல இருட்டாகத் தொடங்கின.

16ம் நூற்றாண்டின் இரண்டாம் பாதி, இந்தியாவில் கொள்கை மாற்றங்கள் மற்றும் சமூக அணுகுமுறை மாற்றங்களைப் பிரதிபலித்தது. ‘கருணையின் கடுமை’ என்பது ஒரு சகிப்புத் தன்மையற்ற கொள்கையாகும். ஜேசுயிட்கள்கூட 15ம் நூற்றாண்டைவிட 16ம் நூற்றாண்டில் இளைய உறுப்பினர்களிடம் சகிப்புத்தன்மை குறைவாயி ருந்தாக புகார் அளித்தனர்.

இந்து மதம் மற்றும் உருவ வழிபாடு பற்றிய கேள்விகளைக் கேட்டு மதத்தை வேறுபடுத்திப் பார்ப்பதை கிறிஸ்தவர்கள் செய்வில்லை. இந்து மதசின்னம், இந்து மதநம்பிக்கை மற்றும் பழக்கவழக்கங்களுக்கு மேலாக, இனம் அல்லது பிராந்திய கலாச்சாரத்தினால் அவர்கள் மனம் புண்பட்டது. ஜேசுயிட் அடக்குமுறையை மக்கள் அதிகமாக உணர்ந்தார்கள். ஜேசுயிட்கள், தங்கள் பிரச்சாரத்தின் வீரியம், வைஸ்ராயின் பதவிக்காலம் வரை மட்டுமே நீடிக்கும் என்பதை தெளிவாக உணர்ந்திருந்தார்கள். தங்களால் இயன்றவரை வைஸ்ராயை தக்கவைக்க விரும்பினார்கள்.

கி.பி.1560ல் காரம்போலிமில் ஏராளமானோர் கிறிஸ்தவர்களாக மாறுவதைக் கண்டு ஊர்த் தலைவர்கள் ஒன்று திரண்டனர். மதம் மாறுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் மக்கள் தங்கள் சொந்த மதத்தின்படி ஒன்றாக வாழ்வதை பரிசீலிக்கவேண்டும் என் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, கோவாவில் போர்த்துகீசிய சட்டத்தின்படி, கிறிஸ்தவராய் மாறுவோருக்கு பலவித சலுகைகள் வழங்கி பரம்பரைச் சட்டங்களில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டன.

  • · நிலவரி விலக்கு: கிறிஸ்தவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு நில வரியிலிருந்து (டிசிமோஸ்) விலக்கு அளிக்கப்பட வேண்டும்.
  • · ஜூன் 25, 1557 தேதியிட்ட கிங் ஜானின் அரசாணை: பூர்வீக குடிகளுக்கு (மண்ணின் மக்கள்) வழங்கப்பட்டுவந்த அலுவலகப்பணி;கள் இனி அவர்களுக்கு கொடுக்கப்படாமல், கிறிஸ்தவர் களுக்கு வழங்கப்படவேண்டும்.
  • · அடிமைகள் விடுதலை: (ஆணை-3 நவம்பர் 1572) கிறிஸ்தவர்களாக மாறிய அடிமைகள், இந்துக்களின் வசமிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.
  • · கி.பி.1562ம் ஆண்டு; ஆணை: ஒரு இந்துவின் மனைவி, கிறிஸ்துவராக மாறும்போது (கணவர் அவிசுவாசி), இவருக்கு தனது நகைகள் மற்றும் ஆடைகள் மீது உரிமையும்; மேலும், கணவரின் அசையும்-அசையா சொத்துக்களின் மீது (முன்னும்-பின்னும்) சமபாதி; உரிமையும் உண்டு.

கி.பி.1551ல் இந்தியாவுக்கு வந்து, பின்னர் ஜேசுயிட் சமூகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, கி.பி.1561ல் போர்ச்சுகலுக்குத் திரும்பிய ஆண்டனி டி ஹெரேடியா, “நாங்கள் எங்கள் மதத்தை யார் மீதும் திணிக்கவில்லை. ஆனால் நடைமுறையில் ஜேசுயிட்கள்; கிறித்தவ மதத்தைப் பரப்புவது மிகவும் மூர்க்கத்தனமாக இருந்தது என்று குற்றம் சாட்டுகிறார். இது, ஜெசுவைட்டுகளின் மிகக்கடுமையான விமர்சகர்கள், ஜேசுயிட் ஆணையத்தின் உள்ளேயே இருந்ததையே குறிக்கிறது.

இந்திய கிறிஸ்தவ திருச்சபை வரலாறு தொடரும்...
Author: Dr. Mrs. Salomi Manohar
Asst. Professor Rtd., (Pope’s College, Sawyerpuram) Thiruvanmiyur, Chennai. South India