Vedha Aratchi
EPISODE-107
April 2026
சங்கீதங்கள் கற்றுத்தரும் விலையேறப்பெற்ற சத்தியங்கள்

AUTHOR: REV.DR. D.SURESH RAJAN

சங்கீதம் - 107

முன்னுரை:

வாழ்க்கையில் நாம் பல்வேறு நிலைகளில், காணாமல் போனவர்களாக, சிறைப்பட்டவர்களாக, நோயுற்றவர்களாக, புயலில் சிக்குண்டவர்களாக காணப்படுகிறோம். இப்பாடல், இறைமக்கள் அனுபவிக்கும் பலவித நெருக்கங்களிலும், இக்கட்டுகளிலும் இறைவன் எவ்வாறு அவர்களை மீட்டெடுக்கிறார் என்பதை விவரிக்கிறது. ஒவ்வொரு விடுதலைச் சரிதையின் முடிவிலும் நன்றி செலுத்த அழைப்பு வருகிறது. இது இறைமக்கள் எப்பொழுதும் நன்றியுணர்வு உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

1. வழிதவறி அலைபவர்கள்: (வச.4 - 9)

இஸ்ரவேல் மக்கள் பாலைநிலத்தில் அலைந்து திரிந்தனர். போகவேண்டிய வழி அவர்களுக்கு தெளிவாகத் தெரியவில்லை. பசி, தாகம், மனச்சோர்வு அவர்களை வாட்டியது. இக்கட்டான சூழநிலையில் அவர்கள் இறைவனை நோக்கி கூப்பிட்டனர். ஆண்டவர் அவர்களை விடுவித்து, நேரிய பாதையில் நடத்தி, அவர்கள் குடியிருக்கும் நகரை அடையச் செய்தார். நீங்கள் இப்போது எந்த பாலைநிலத்தில் அலைகிறீர்கள்? உங்கள் வாழ்க்கையில் தேவன் காட்டும் நேரிய பாதை எது? பாதை தெரியவில்லையா? வழிகாட்ட யாருமில்லையா? ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுவொம்; அவர், பாதையை நமக்குக் காட்டி, நமது ஆன்மாவின் பசி-தாகத்தை போக்குகிறார்.

2. இருளிலும் சிறையிலும் கிடப்பவர்கள்: (வச.10 - 16)

இறைவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல், அவரது அறிவுரைகளைப் புறக்கணித்து தங்கள் மனம்போல் வாழ முற்பட்டதால், மக்கள் காரிருளிலும் சாவின் நிழலிலும் கிடந்தனர். விலங்கிடப் பட்டவர்களாக துன்பப்பட்டனர். ஆனால் அவர்கள் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட்டபொழுது அவர் அவர்களை இருளிலிருந்து வெளிக்கொணர்ந்து, தளைகளைத் தகர்த்தார். வெண்கலக் கதவுகளையும் இரும்புத் தாழ்ப்பாள்களையும் உடைத்தார்.

நம் வாழ்விலும் பாவம் நம்மைச் சிறைபிடிக்கிறது; அது நம்மை தனிமைப்படுத்தி இருளுக்குள் தள்ளுகிறது. உங்களை அடைத்து வைத்திருக்கும் இரும்புத் தாழ்ப்பாள் எது? உங்கள் கடன்பட்ட நிலை, தீய பழக்கங்களுக்கு அடிமைம்பபட்ட நிலை போன்ற தாள்ப்பாள்களை உடைக்க ஆண்டவரை அழைத்திருக்கிறீர்களா? நாம் மனந்திரும்பி இறைவனை நோக்கி கூப்பிடும்போது, அவர் நம்மை விடுவிப்பதோடு, புதுவாழ்வையும் நமக்குத் தருகிறார். வெண்கலக்கதவுகள் இரும்புத் தாழ்ப்பாள்கள் என்பவை மனிதசக்தியால் உடைக்கமுடியாத கட்டுகளைக் குறிக்கின்றன; அவற்றை. கடவுளால் மட்டுமே உடைக்க முடியும்.

3. தீய நெறியால் நோயுற்றவர்கள்: (வச.17-22)

மக்களின் தீய நெறிகள் மற்றும் தீச்செயல்களால் நோயும் துன்பமும் வந்தடைந்தது. வாழ்வின் விழிம்பிற்க்கு சென்று உணவை வெறுத்து, சாவின் வாயிலை மக்கள் நெருங்கினர். பரிதாபமான இந்த சூழலிலும் அவர்கள் இறைவனை கூவியழைத்த போது, அவர் தம் வார்த்தையை அனுப்பிக் குணமாக்கினார். தமது ஜனமாகிய அவர்களை அழிவிலிருந்து விடுவித்தார்.

தீயபழக்கங்களும், பாவமும் அழிவைக் கொண்டுவருகின்றன; ஆனால், ஆண்டவரது வார்த்தை நம்மை அழிவிலிருந்து மீட்டு குணப்படுத்துகிறது. குணமடைந்த நாம் அமைதியாயிராமல் நன்றிப்பலிகளையும், புகழ்ந்தேத்துதலையும் செலுத்தவேண்டும் என்பதை இந்தப்பாடலின் இப்பகுதி நமக்கு தெளிவுபடுத்துகிறது.

4. புயலில் சிக்கிய மாலுமிகள்: (வச.23-32)

கடலில் வாணிகம் செய்யச் சென்றவர்களுக்கு திடீர் புயல், கடல் கொந்தளிப்பின் காரணமாக ஏற்ப்படும் மரண பயம், தள்ளாட்டம், தடுமாற்றம் ஆகியவை இங்கு உருவாகப்படுத்தப்பட்டுள்ளன. வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்திற்க்கு வந்துவிட்டோம், இனி வழியே இல்லை என்னும் சூழ்நிலையில் இறைவனை நோக்கி அவர்கள் அபயமிட, அற்புதமாய் புயலை அமைதியாக்கி, அவர்கள் சேர விரும்பிய துறைமுகத்தில் சேர்த்தார் என இங்கு கூறப்பட்டுள்ளது.

அன்பர்களே! உங்கள் வாழ்வில் எழுந்துள்ள புயல் எது? அதை அமைதிப்படுத்த இயேசுவை உங்கள் படகில் ஏற்றிக்கொண்டீர்களா? வாழ்க்கை எதிர்பாராத புயல்களைக் கொண்டுவரும். தொழில், குடும்பம், உறவுகள் என்பவற்றில் சில சமயங்களில் நாம் கட்டுப்பாட்டை இழக்கிறோம். ஆனால், புயல்களுக்கும் அதிபதி இறைவனே; அவர் ஒரு வார்த்தையால் அமைதியை உண்டாக்கு கிறார். அவரது வழிநடத்துதலை அனுபவிக்கும் நாம் அவரது புகழை மக்களின் பேரவையிலும், பெரியோரின் மன்றத்திலும் எடுத்துரைக்க வேண்டும்.

முடிவுரை: (வச.33-43)

இறைவன் தீயோருக்கு ஆறுகளைப் பாலைநிலமாக்கி, செழிப்பான நிலத்தை உவர்நிலமாக்கு கிறார். ஆனால், எளிவர்களாகிய தம் ஜனங்களுக்கு பாலை நிலத்தை நீர்த்தடாகமாகவும், வறண்ட நிலத்தை நீருற்றுகளாகவும் மாற்றி, அவர்களை ஆசீர்வதிக்கிறார்.

இந்தப் பாடல் முழுவதும், மனிதனின் பிரச்சனை மாறுபட்டாலும், தேவனின் பதில் ஒன்றாகவே உள்ளது. இறைமக்கள் ஆண்டவரைக் நோக்கி வேண்டுதல் செய்தபொழுது அவர் அவர்களை விடுவித்தார். ஆகவே எந்த நிலையில் இருந்தாலும், நாம் அவரிடம் செல்லலாம். அவர் நல்லவர், அவரது பேரன்பு என்றென்றும் உள்ளது. உங்கள் அனைவருக்கும் உயிர்த்தெழுந்த திருநாள் வாழ்த்துக்கள். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

சங்கீதங்கள் கற்றுத்தரும்விலையேறப்பெற்ற சத்தியங்கள். தொடரும்......



ஆசிரியர்: அருட்திரு. அறிவர். டி. சுரேஷ் ராஜன்,
தலைவர் (இந்திய மறை மாநாடு), குளோபல் மெத்தடிஸ்ட் திருச்சபை.

AUTHOR: REV. DR. D. SURESH RAJAN,
CONFERENCE SUPERINTENDENT, INDIA ANNUAL CONFERENCE, GLOBAL METHODIST CHURCH IN INDIA.