VasanaDhyian
EPISODE-168
April 2026
சங்கீதங்களில் சிலுவைக்காட்சி
அனுதின கொண்டாட்டமாகும் ஆண்டவரின் உயிர்த்தெழுதல்

AUTHOR: REV.SJD Dharmaraja

சாயங்காலத்தில் அழுகை தங்கும் விடியற்காலத்தில் மகிழ்ச்சியுண்டாகும். சங்.30:5

கிறிஸ்து பிறப்புக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சங்கீத புத்தகத்தில், மேசியாவின் பாடு, மரணம், உயிர்த்தெழுதல் பற்றிய தீர்க்கதரிசனங்கள் அடங்கியுள்ளது வியப்புக்குறிய ஒன்றாகும். இயேசு கிறிஸ்து, பேதுரு, பவுல் ஆகியோர், சங்கீத வசனங்களை பயன்படுத்தியது சிறப்புக்குறியதாகும்.

1.இயேசுவின் பாடு-மரணம்:
சங்கீதம்-22, சிலுவைப்பாடுகள் மற்றும் சிலுவை மரணத்தின் வேதனையை விவரிக்கிறது, இயேசுவின் மரணமானது “என் தேவனே. என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்” என்ற அவருடைய சிலுவை வசனத்தில் வெளிப்படுத்தப்பட்டு அவரது கல்லறையில் நிறைவடைந்தது. கடவுள், இயேசுவின் பாடுகளைப் புறக்கணிக்கவில்லை, மாறாக அவர் இயேசுவை உயிர்ப்பித்து, பரலோகிற்கு ஏறச்செய்து அவரை மகிமைப்படுத்தினார்.

2.இயேசுவின் உயிர்த்தெழுதல்: சங்கீதம்-16, சங்கீதம்-30 ஆகியவை ஆத்துமாவின் அழியாத நிலையை, குறிப்பாக இயேசுவின் உயிர்த்தெழுதலை தீர்க்கத்தரிசனமாக முன்னறிவிப்பதாக அமைந்துள்ளன (சங்.16:10, சங்.30:3). “நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்” (சங்.16:10) என்ற வசனத்தை அப்.2:27ல் பேதுருவும், அப்.13:35ல் பவுலும் பயன்படுத்துவது இதை ருசுப்படுத்துகிறது. தாவீது மரித்தார், அவருடைய சரீரம் அழிந்தது; இதிலிருந்து சங்கீதம்.16:10ல் காணப்படும் ‘பரிசுத்தவான்’ என்ற வார்த்தை, இயேசுவைக் குறித்துதான் எழுதப்பட்டிருக்கிறது என்பதை பேதுருவும் பவுலும் உறுதிப்படுத்துகின்றனர்.

“கர்த்தாவே, நீர் என் ஆத்துமாவை பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணி, குழியில் இறங்காதபடி என்னை உயிரோடே காத்தீர்.” (சங்.30:3) என்பது, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கான தீர்க்கதரிசன அறிவிப்பாகும். “சாயங்காலத்தில் அழுகை தங்கும் விடியற்காலத்தில் மகிழ்ச்சி உண்டாகும்” (சங்.30:5) என்ற வசனத்தின் மூலம், மரணத்தின் துயரத்திலிருந்து உயிர்த்தெழுதலின் மகிழ்ச்சிக்கு வழிநடத்தும் கிறிஸ்துவின் வல்லமை, வருடம் ஒருமுறை ஆசரிக்கும் வரலாற்று நிகழ்வு மட்டுமின்றி, அது ஒரு அனுதின நிகழ்வாக மாறவேண்டியதன் அவசியத்தை சங்கீதக்காரர் வலியுறுத்துகிறார். சங்.30:5ல் காணப்படும் காலைநேர உயிர்த்தெழுதலின் மகிழ்ச்சியை சகவிசுவாசிகளோடு பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.


அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா, ஊழிய இயக்குநர்
இரட்சிப்பு ஊழியங்கள், சென்னை-93, தென்னிந்தியா