சகோ. எம். அசரியா ஞானதாஸ் எம்.ஏ; எம்.எட்
வேதவசன-விளக்கு, உள்ளுணர்வின்-விளக்கு, சூழ்நிலையின்-விளக்கு
இங்கிலாந்து தேசத்து துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டி ருந்த ஒரு சொகுசுக் கப்பலில், EGBERG என்னும் பெயர்கொண்ட ஒரு பேராசிரியர் பயணம் செய்துகொண்டிருந்தார். அவருடன் பயணம் செய்த 600பயணிகளும் கப்பலில் இருந்தபடி இயற்கை காட்சிகளை ரசித்ததோடு ஆடல், பாடல், விளையாட்டு, அரட்டை என மகிழ்ச்சியாக தங்கள் நேரத்தை செலவிட்டுக்கொண்டிருந்தனர்.
மாலை நேரம் சென்று இரவு வந்தது, விண்மீன்கள் இன்றி வானம் இருண்டது; கப்பலை காரிருள் சூழ்ந்தது. இதைக்கண்ட பயணிகள் திகிலடைந்தனர். இந்த கும்மிருட்டில் கப்பல் போய்ச்சேர வேண்டிய துறைமுகத்தை சென்றடையுமா என்ற கேள்வி அவர்களை வாட்டியது. EGBERG, அறிவியல் மற்றும் இறையியல் ஆராய்ச்சியில் ஈடுபடும் ஒரு தேவமனிதராவார். எனவே EGBERG கப்பலின் கேப்டனை அணுகி, “வானத்தில் விண்மீன்கள் இல்லாமல் இப்படி காரிருள் சூழ்ந்த நிலையில் எங்களை எப்படி இங்கிலாந்தில் கொண்டு சேர்ப்பீர்கள்?” என வினவினார். கப்பல் கேப்டனோ, மிகவும் எளிதாக, “அதோ பாருங்கள், தூரத்தில் புள்ளிகள்போல் 3விளக்குகள் தெரிகிறதே அதுதான் எனக்கு அடையாளம்; அந்த 3விளக்குகளும் நேர்கோட்டில் வரும் நிலையை அறிந்து நேர்கோட்டில் கப்பலை செலுத்தினால், கப்பல் நேராக இங்கிலாந்து துறைமுகத்துக்குள் சென்றுவிடும்.” என விளக்கினார்.
இந்த பதிலை கேட்டதும் EGBERGன் பயம் நீங்கி, புதிய நம்பிக்கை பளிச்சிட்டது. அது என்னவெனில், “நம் வாழ்விலும், ஆணடவர் நமக்கு வைத்துள்ள சித்தத்தை அறிந்துகொள்ள வேதவசனம், ஆவியானவர் தரும் உள்ளுணர்வு, சூழ்நிலை ஆகிய மூன்று விளக்குகளும் நம்மை நேர்வழியில் நடத்தும்” என்பதேயாகும். கப்பல் கேப்டன் கூறியபடி இம்மூன்றும் ஒன்றாக செயல்படும்போது, தேவனுடைய பரிபூரண சித்தத்தை நாம் அறிய முடியும் என்பதே.
பிரியமானவர்களே! நம் பிள்ளைகளின் கல்வி, திருமணம், நமது பணிகள், தொழில் ஆகிய நிலைகளில், நாம் இயேசு கிறிஸ்துவின் பரிபூரண சித்தத்தின்படி செயல்பட்டு மேலான ஆசீர்வாதங்களை பெற வாழ்த்துகிறேன்.
வேதம் இவ்வாறு கூறுகிறது:
தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.1யோவா-2:17
நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்.எபி-10:36
தேவனுடைய சித்தத்தின்படி யாவும் உண்டாயிருக்கிறது. வெளி-4:11
கர்த்தர் தமக்கு சித்தமானதையெல்லாம் செய்கிறார்.சங்.135:6